வாழைத்தோட்டம் ஆற்றங்கரை மக்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டி கொடுக்கும் பணி மந்தமாக நடக்கிறது. அந்த பணியை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கால் பாதிப்பு
வால்பாறையில் கடந்த 2019-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. அப்போது வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளம், கக்கன் காலனியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.
மேலும் இதுபோன்ற நிலை ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை பெய்யும்போது ஏற்படுவதாகவும், இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று ஆற்றங்கரை மக்களை மாற்று இடத்தில் வீடுகள் கட்டி கொடுத்து குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மந்த கதியில் பணி
அதன்படி வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் தீயணைப்பு நிலையத்திற்கு பின்புறத்தில் உள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தை வீடுகள் கட்டிக்கொடுக்க தேர்வு செய்யப்பட்டது. அங்குள்ள 2½ ஏக்கர் நிலத்தில் வீடுகள் கட்ட ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து குடிசை மாற்று வாரியம் மூலம் 112 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது 48 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அதுவும் பணி முழுமை பெறாத நிலையில் உள்ளது. மற்ற வீடுகள் கட்டும் பணி மந்த கதியில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்து தர பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் யாரெல்லாம் வைப்பு தொகையாக ரூ.1 லட்சம் கட்ட முடியும் என்ற விவரங்களையும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் பெற்றனர். ஆனால் இன்னும் பணி முழுமை பெறாததால், விண்ணப்பித்தவர்களுக்கு உரிய நாளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.
விரைவுபடுத்த வேண்டும்
இதுகுறித்து கக்கன்காலனி மக்கள் கூறும்போது, ஆற்றங்கரையில் வசிக்கும் எங்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டி தருவதாக கூறினார்கள். 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் வீடு கட்டும் பணி முடிவடையவில்லை. இதனால் எப்போது அந்த பணி முடிவடைவது, நாங்கள் எப்போது குடியேறுவது என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.
மாவட்ட கலெக்டரோ, பிற உயர் அதிகாரிகளோ இதுவரை வந்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது வீடுகள் கட்டும் பணியை விரைவுபடுத்த அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என்றனர்.