மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை மையம் கலெக்டர் கிராந்திகுமார் தகவல்

0
13

கோவை: மாற்றுத்திறனாளிகள் தின விழா, கோவை சித்தாபுதுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், 30 பயனாளிகளுக்கு, ரூ.7.33 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் இதுவரை, 23 ஆயிரத்து, 921 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் வழங்கக்கூடிய தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, 22 ஆயிரத்து, 272 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 8,510 பேருக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஜி.டி.நாயுடு அறக்கட்டளையுடன் இணைந்து செட்டிபாளையம் பேரூராட்சியில், 114 வீடுகள் கட்டப்படுகிறது. ‘நம்ம கோவை’ அமைப்பு மூலம் சிறப்பு பூங்கா அமைக்கப்படுகிறது.

வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கி கடனுதவி, ஆவின் பாலகம் அமைக்க உதவி செய்யப்படுகிறது. வங்கி நிதியுதவியுடன், கோவை மாவட்டத்தில் ‘உரிமைகள் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் கோட்டம் மற்றும் வட்டார அளவில், 23 ஓரிட சேவை மையங்கள் ஏற்படுத்தப்படும். கடை நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடைய வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், பேச்சு பயிற்சியாளர் சொர்ண பவானி, மாநகராட்சி உதவி கமிஷனர் செந்தில்குமரன், துணை மேயர் வெற்றிச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.