கோவை துடியலூரில் லாட்டரி அதிபர் மார்ட்டின் அலுவலகம் உள்ளது. இங்கு கேஷியராக பணியாற்றி வந்தவர் கோவை, உருமாண்டம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி (வயது45).
இந்த நிலையில், மார்ட்டின் நிறுவனத்தில் கடந்த மே மாதம் 1-ந் தேதி வருமானவரி சோதனை நடைபெற்றது. அப்போது பழனிசாமியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து மே மாதம் 3-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பழனிசாமி காணாமல் போனார். அவர், காரமடை வெள்ளியங்காடு பகுதியில் உள்ள ஒரு குட்டையில் பிணமாக கிடந்தார்.
இதனால் தனது தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் பழனிசாமியின் மகன் ரோகின்குமார் மனு தாக்கல் செய்தார். அதில், எனது தந்தையின் உடலில் இருந்த அனைத்து காயங்களும் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
தற்போது, தாக்கல் செய்யப்பட்டுள்ள உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எனவே, எங்களது தரப்பு டாக்டர் ஒருவரையும் இணைத்து மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக விசாரிக்க நீதிபதி ஒருவரை நியமிக்க கோவை தலைமைக் குற்றவியல் நீதிபதி எஸ்.நாகராஜனுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, பழனிசாமியின் மரணம் குறித்து விசாரணை நடத்த கோவை 8-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு எம்.ராமதாஸ் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு எம்.ராமதாஸ், பழனிசாமியின் பிரேத பரிசோதனை அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார். மேலும், பழனிசாமியின் உடலை ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் குழு அல்லாமல் 2-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கொண்ட குழுவினரை வைத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய கோவை அரசு மருத்துவக் கல்லூரி டீனுக்கு உத்தரவிட்டார்.
இந்த புதிய மருத்துவர்கள் குழுவில், மனுதாரர் (ரோகின்குமார்) தரப்பில் பரிந்துரை செய்யப்பட்ட டாக்டர் பி.சம்பத்குமார் என்பவரையும் சேர்க்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி பழனிசாமியின் உடல் மறு பிரேத பரிசோதனை மே மாதம் 28-ந் தேதி நடைபெற்றது. பழனிசாமி தரப்பு டாக்டராக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் சம்பத்குமார், அரசுத் தரப்பில் சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கோகுல்ராம், கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ராஜேஷ் ஆகியோர் மறு பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து பழனிசாமியின் உடல் அவருடைய மனைவி மற்றும் மகன்களிடம் கடந்த மாதம் 12-ந் தேதி ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் பழனிசாமி குடும்பத்தினர் தரப்பில் இருந்து மறுபிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்களில் ஒருவரான சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் சம்பத் குமார் தனது அறிக்கையை, மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் முன்னிலையில் நேற்று தாக்கல் செய்தார்.
இதுகுறித்து டாக்டர் சம்பத் குமார் கூறுகையில், பழனிசாமி நீரில் மூழ்கி இறந்தாரா? இல்லையா? என்பதைக் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர் தானாக நீரில் மூழ்கி இறக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மூச்சுத்திணறடித்து உயிரிழப்பை ஏற்படுத்தி இருக்கலாம். அவர் கொலைதான் செய்யப்பட்டாரா? என்பது போலீசாரின் இறுதி விசாரணைக்கு பின்னர் தான் தெரியவரும் என்றார்.
பழனிசாமி குடும்பத்தினர் தரப்பு வக்கீல் பன்னீர் செல்வம் கூறும்போது, எங்கள் தரப்பு டாக்டர் மேற்கொண்ட மறுபிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்துள்ளோம். அதில் பழனிசாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. மற்ற இரு டாக்டர்களின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அவர்களது அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்றார்.
பழனிசாமியின் மனைவி ராதாமணி கூறும்போது, டாக்டர் சம்பத்குமாரின் அறிக்கையில் என்னுடைய கணவர் தற்கொலை செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். என்னுடைய கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் 2 டாக்டர்களின் அறிக்கை வந்தபிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.