மார்க்கெட்டில் மீன்வாங்க குவிந்த பொதுமக்கள்

0
93

கோவை உக்கடத்தில் மொத்த மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு தூத்துக்குடி, ராமேசுவரம், கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன் கொண்டு வரப்படுகிறது. இங்கு மீன்கள் வாங்க கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அதிகாலையிலேயே வந்து செல்கிறார்கள். அத்துடன் கோவை-பேரூர் மெயின் ரோட்டில் சில்லறை மார்க்கெட்டும் உள்ளது.

விடுமுறை தினமான நேற்று மொத்தமாக மீன் வகைகளை வாங்க அதிகாலையிலேயே பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் கோவை பேரூர் ரோட்டில் உள்ள சில்லறை மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. தீபாவளி பண்டிகை என்பதால் பொருட்கள் மற்றும் துணிகள் வாங்க கடைகளில் பொதுமக்கள் குவிந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மீன் மார்க்கெட்டை சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், வழக்கமாக சில்லறை மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விற்பனையில் நேற்று 30 சதவீத விற்பனை கூட நடக்கவில்லை. மிகக்குறைவான பொதுமக்களே வந்து மீன் வகைகளை வாங்கிச்சென்றனர். மொத்த மீன் மார்க்கெட்டுக்கு அதிகாலையிலேயே சென்று மீன் வாங்கிவிட்டு பின்னர் காலையில் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் சென்றதால் தான் இங்கு கூட்டம் குறைந்துள்ளது என்றனர்.

இந்த மார்க்கெட்டில் (ஒரு கிலோ) மத்தி ரூ.150, அயிலை ரூ.200, விளமீன் ரூ.500, பாறை ரூ.500, வஞ்சரம் (சின்னது) ரூ.600, பெரியது ரூ.750, ராமேசுவரம் பால்நண்டு ரூ.600, சாதாரண நண்டு ரூ.300, ஊளி ரூ.350, பால்சுறா ரூ.500, நெத்தலி ரூ.300, சங்கரா ரூ.300, இறால் ரூ.500-க்கு விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.