மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

0
48

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மாரியம்மன் கோவில்

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் 400 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து விமான பாலாலயம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

மேலும் திருப்பணிகள் தொடங்கப்பட்டு பழமை வாய்ந்த விமான கோபுரத்துக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம் பூசி புதுப்பொலிவு செய்யப்பட்டது. பின்னர் கடந்த மாதம் 12-ந் தேதி யாக சாலை அமைக்கும் பணிக்கு கால்கோள் போடப்பட்டது. அதில் அம்மனுக்கு 9 யாக குண்டம், பரிவார தெய்வங்களுக்கு 4 யாக குண்டம் என மொத்தம் 13 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன.

கும்பாபிஷேகம்

இதையடுத்து கடந்த 23-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 25-ந் தேதி காலை 9.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, இரவு 7 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதற்கால யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாக பூஜை நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 9.45 மணிக்கு ராஜகோபுரம், மாரியம்மன் விமான கோபுர மகா கும்பாபிஷேகமும், காலை 9.55 மணிக்கு விநாயகர், முருகன், அங்காளயம்மன் மற்றும் அன்னை மாரியம்மன் மூலாலய மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அப்போது ராஜகோபுரம், மூலவர் விமான கோபுரம் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. மேலும் விழாவை காண கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

அன்னதானம்

விழாவையொட்டி தெப்பக்குளம் வீதி, கடை வீதியில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் கோவிலை சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. இதனால் பொள்ளாச்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது தவிர நகராட்சி பள்ளி வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்பு தபால் தலை

கும்பாபிஷேக விழாவையொட்டி மாரியம்மன், அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா என்று எழுதப்பட்டு, அம்மன் படத்துடன் சிறப்பு தபால் தலை நேற்று வெளியிடப்பட்டது. கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார வழிபாடு, அம்மன் திருவீதி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., சாமுண்டீஸ்வரி சுகர்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், சக்தி பைனான்ஸ் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியம், மகாலிங்கம் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் ஹரிகரசுதன், கொ.ம.தே.க. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் நித்தியானந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.