மாநகரில் குற்றங்கள் குறைந்து விட்டதாம்; போலீஸ் கமிஷனர் பெருமிதம்-

0
4

கோவை : கோவை மாநகர பகுதிகளில், குற்றச்சம்பவங்கள் குறைந்து விட்டதாக, போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தெரிவித்தார்.

மாநகர பகுதிகளில் ரவுடிகள், கஞ்சா விற்பனை, சட்ட விரோத மது விற்பனை, போக்குவரத்து பிரச்னை, அடிதடி உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் வகையில், 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில், ‘பீட் ஆபிசர்’ திட்டத்தை, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், கடந்த ஜன., மாதம் துவக்கி வைத்தார்.

இதில், 312 போலீசார், சுழற்சி முறையில் 24 மணி நேரமும், மாநகர் முழுவதும் இரு சக்கர வாகன ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாநகர பகுதிகளில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக, போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ”மாநகரில் கஞ்சா, மெத்த பெட்டமைன், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தும் மற்றும் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குற்றச்சம்பவங்களை குறைக்க மாநகரில் இருந்து, 110 ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீறி உள்ளே வருவோர் கைது செய்து, சிறையில் அடைக்கப்படுகின்றனர். மாநகரில் கடந்த 2024ம் ஆண்டு ஜன., முதல் மார்ச் மாதம் வரை 178 குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆனால், பீட் ஆபிசர் திட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர், இந்தாண்டு ஜன., முதல் தற்போது வரை 128 சம்பவங்களே நடந்துள்ளன. பீட் ஆபிசர் திட்டத்தால் அடிதடி, வழிப்பறி போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளன,” என்றார்.