கோவை; கோவை மாநகராட்சி வரி வசூல் மையங்கள் தினமும் காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணி வரை செயல்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாநகராட்சியில், 5.86 லட்சம் வரி விதிப்புதாரர்கள் உள்ளனர். ஆண்டுக்கு இரு முறை சொத்துவரி செலுத்த வேண்டும். நடப்பு நிதியாண்டுக்கு (2024-25) ரூ.471 கோடி சொத்து வரி வசூலிக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் (2023-24) நிலுவையாக இருந்த ரூ.124 கோடியை சேர்த்து, மொத்தம் ரூ.595 கோடி வசூலிக்க வேண்டும்.
நடப்பு நிதியாண்டு முடிய, இன்னும் இரு மாதங்களே இருக்கின்றன. இதுவரை ரூ.293 கோடியே வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இது, 49.25 சதவீதம்.
இன்னும் ரூ.302 கோடி வசூலிக்க வேண்டியிருக்கிறது. இரு மாத அவகாசத்துக்குள், இலக்கை எட்டுவதற்கு வரி வசூலை தீவிரப்படுத்த, அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. நேற்று ஒரே நாளில், ரூ.1.86 கோடி வசூலிக்கப்பட்டது.
இனி, திங்கள் முதல் ஞாயிறு வரை, தினமும் காலை, 9:00 முதல் மாலை, 6:00 வரை மாநகராட்சியின் ஐந்து மண்டல அலுவலகங்களில், செயல்படும் வரி வசூல் மையங்கள் மற்றும் வார்டுகளில் உள்ள மையங்களில் வரி வசூலிக்கப்படும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.