கோவை: ”கோவையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யுங்கள்; அல்லது ஐகோர்ட்டில் மாநகராட்சி சார்பில் பொது நல வழக்கு தொடர்ந்து தீர்வு காணுங்கள்,” என, தி.மு.க., கவுன்சிலர் சிவா, யோசனை தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி சார்பில் சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பில், ஒரு லட்சத்து, 15 ஆயிரம் தெருநாய்கள் சுற்றித்திரிவது தெரியவந்தது.
தனியார் அமைப்புகள் உதவியுடன் பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது; இதுவரை, 30 ஆயிரம் நாய்களுக்கே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவற்றுக்கு மூன்றாண்டுக்குள் கருத்தடை செய்ய, மாநகராட்சி சுகாதாரப் பிரிவு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது
ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய, 1,650 ரூபாய், மாநகராட்சியால் செலவு செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தும் கூட, தெருநாய் பிரச்னை தீர்ந்தபாடில்லை. வீதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.
தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதில் முறைகேடு நடப்பதாக, மன்ற கூட்டங்களில் தி.மு.க., கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இதுவரை கோவையில் மட்டும் தெருநாய் கடித்து, ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இச்சூழலில், கோவை மாநகராட்சியில் நேற்று நடந்த வடக்கு மண்டல கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் சிவா பேசுகையில், ”தெருநாய் பிரச்னை அதிகரித்து வருகிறது. சீனாவில் நாய்க்கறி சாப்பிடும் பழக்கம் இருக்கிறது.
அந்நாட்டுடன் கோவை மாநகராட்சி வர்த்தகம் ஒப்பந்தம் செய்து, தெருநாய்களை ஏற்றுமதி செய்யுங்கள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயில், இரு வார்டுகளில் வளர்ச்சி பணிகள்
மேற்கொள்ளுங்கள்,” என்றார்.
மண்டல தலைவர் கதிர்வேல் பதிலளிக்கையில், ”இறைச்சியாக மட்டுமே அனுப்ப முடியும்; உயிருடன் அனுப்ப முடியாது. நாய்களை கொல்ல தடை இருக்கிறது,” என்றார்.
சிவா தொடர்ந்து பேசுகையில், ”இது, சீரியஸ் பிரச்னை. கருத்தடை சிகிச்சை மையம் போதுமானதாக இல்லை; புதிதாக கட்டி, அனைத்து நாய்களுக்கும் சிகிச்சை செய்வதற்குள், நாய்களின் பெருக்கம் அதிகரித்து விடும்.
”அதனால், ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர வேண்டும். தெருநாய் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த, நீதிபதி உத்தரவை நாடலாம்,” என்றார்.