மாநகராட்சி பள்ளியில் சேர்க்கை குறைவு; ஏன் நகராட்சி துறை முதன்மை செயலர் கேள்வி

0
7

கோவை; தமிழக நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன், கோவையில் அமைக்கப்படும் செம்மொழி பூங்கா பணிகளை நேற்று பார்வையிட்டார்.

அங்கு உருவாக்கப்படும் பூங்காக்கள், ‘கன்வென்சன் சென்டர்’ உள்ளிட்ட பணிகளை பற்றி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் விளக்கினார். மரக்கன்றுகள் நடும் பணியை விரைவுபடுத்த, முதன்மை செயலர் அறிவுறுத்தினார்.

பின், ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வி.ஆர்., மற்றும் ஏ.ஆர்., ஆய்வகத்தை பார்வையிட்ட செயலருக்கு, மூளை தொடர்பான தகவல்களை தொழில்நுட்ப ரீதியாக வீடியோ காட்டினர். சிறப்பாக இருப்பதாக, செயலர் பாராட்டினர்.

மாணவியரின் வருகைப்பதிவேட்டை ஆய்வு செய்த அவர், எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணம் கேட்டார். முந்தைய காலகட்டங்களில், 1,000 பேருக்கு மேல் படித்தனர். இப்போது ஏன் குறைந்திருக்கிறது; மாணவியர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென அறிவுறுத்தினார். அங்குள்ள கழிப்பறைக்கு சென்ற அவர், ‘துர்நாற்றம் வருகிறது; சுகாதாரப் பணியை மேம்படுத்த வேண்டும்’ என, அறிவுறுத்தினார். செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியிருந்ததை சுத்தம் செய்து, தனது மொபைல் போனுக்கு புகைப்படம் அனுப்ப அறிவுறுத்தினார்.

பின், சேரன் நகரில் இணையதளம் கட்டுப்பாடு வழியாக, 400 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் நடைமுறையை பார்வையிட்டார். அதன்பின், சங்கனுார் பள்ளத்தில் இரு கரையையும் பலப்படுத்தி, தடுப்புச்சுவர் கட்டி, சாலை அமைப்பது தொடர்பாக, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் விளக்கினார்.

சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, அவிநாசி ரோடு, திருச்சி ரோட்டை இணைக்கும் சுற்றுச்சாலையால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கலாம். இதற்கு, 240 கோடி ரூபாய் கேட்டு, மாநகராட்சியில் இருந்து கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. இதுதொடர்பாகவும், செயலர் ஆய்வு செய்து, அறிவுரை வழங்கினார்.