மாநகராட்சி நல்வாழ்வு மைய டாக்டர்கள் ஓட்டம்! உங்க வேலையே வேண்டாம்… ஆளை விடுங்க சாமி!

0
7

கோவை : கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள, நகர்ப்புற நல்வாழ்வு மையங்களுக்கு, தற்காலிக முறையில் தொகுப்பூதியத்தில் டாக்டர்கள் நியமிக்கப்படுவதால், சில மாதங்களிலேயே, வேலையை விட்டு வேறிடத்துக்குச் சென்று விடுகின்றனர். அதனால், நகர் நல மையங்கள் நடத்துவதில் சிரமம்ஏற்படுகிறது,

கோவை மாநகராட்சியில், 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. 64 இடங்களில் நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் கட்ட வேண்டும்; 45 மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள, 19 இடங்களில் கட்டுமான பணி முடிந்திருக்கிறது.

விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர, பொது சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

இம்மையங்களுக்கு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக முறையில் நியமிக்கப்படுகின்றனர். வழங்கப்படும் மாத ஊதியம் போதுமானதாக இருப்பதில்லை என்பதாலும், தற்காலிக பணி என்பதாலும், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், சில மாதங்களில், வேலையே வேண்டாம் என கூறிச் செல்கின்றனர்.

காலியாக இருந்த செவிலியர் பணியிடங்களுக்கு, தற்போது நிபந்தனைகளுடன் செவிலியர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் மூன்று மையங்களில், டாக்டர் பணியிடம் காலியாக இருக்கிறது. மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக நியமிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மீதமுள்ள நல்வாழ்வு மையங்களை, பயன்பாட்டுக்கு கொண்டு வரும்போது, அதற்கு தேவையான டாக்டர்கள் நியமிக்க வேண்டும். தற்காலிகம் மற்றும் தொகுப்பூதியம் என்பதால், டாக்டர்கள் இப்பணிக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு தீர்வு காண, போதிய சம்பளத்துடன் நிரந்தர பணியிடமாக வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.

இதில், சுப்ரமணியம்பாளையம் என்ற இடத்தில் உள்ள நல்வாழ்வு மையம், பணியிடத்துக்கு உகந்ததாக இல்லை; சட்ட விரோத செயல்கள் நடப்பதால், டாக்டர்கள், செவிலியர்கள் பணிபுரிய அச்சப்படுகின்றனர். இரவு நேரங்களில் மதுபானம்அருந்தி

விட்டு, தகராறு செய்வதால், பணிப்பாதுகாப்பு இல்லாத சூழல் காணப்படுகிறது. அதனால், அம்மையத்தில் பணிபுரிய டாக்டர்கள் விரும்புவதில்லை என்கிற பிரச்னைமுளைத்திருக்கிறது.

 

தற்காலிக பணி பிடிக்கவில்லை

மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் கூறுகையில், ‘முதுகலை படிக்கும் மருத்துவ மாணவர்களே இவ்வேலைக்கு வருகின்றனர். எம்.ஆர்.பி., தேர்வு நடைபெற இருப்பதால், அதில் ஆர்வம்காட்டுகின்றனர்.தற்போது மூன்று டாக்டர் பணியிடம் காலியாக இருக்கிறது; இரு வாரங்களுக்குள் நிரப்பப்படும். தற்காலிக பணி என்பதால், வேறு இடம் கிடைத்தால் சென்று விடுகின்றனர். காலை, 8:00 முதல் மதியம், 12;00 மணி வரை, பணிபுரிய வேண்டும். மதியம், 12:00 முதல் மாலை, 4:00 மணி வரை ஓய்வு; மாலை, 4:00 முதல் இரவு, 8:00 மணி வரை பணிபுரிய வேண்டும். இந்நடை முறையை டாக்டர்கள் விரும்புவதில்லை’ என்றனர்.