ஊதிய உயர்வு வழங்க கோரி மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுனர்கள், மேயரிடம் மனு அளித்தனர்.
குறை தீர்ப்பு கூட்டம்
கோவை டவுன் ஹாலில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் கல்பனா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
இதில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாலை, மின்விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்து வரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், சுகாதாரம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த மனுக்களை மேயரிடம் வழங்கினர்.
ஓட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு
கோவை மாநகராட்சி ஒப்பந்தம் ஓட்டுனர்கள் அளித்த மனுவில், நாங்கள் பல ஆண்டுகளாக மாநகராட்சியில் அலுவலர்க ளுக்கு ஜீப் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.490 மட்டுமே வழங்கி வருகிறார்கள்.
எனவே ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 80-வது வார்டை சேர்ந்த பூபதி ராஜ் அளித்த மனுவில், 80-வது வார்டு நாடார்வீதி பின்புறம் பாளையன்தோட்டம் பகுதியில் சாலைகள் அபகரிக்கப்பட்டு குப்பை கிடங்காக மாறி உள்ளது.
இதனால் அங்கு துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. தெரு விளக்கு வசதி இல்லாததால் அந்த பகுதி இரவு நேரங்களில் திறந்தவெளி பாராக செயல்படுகிறது. எனவே அங்கு குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் என்றனர்.
30 மனுக்கள்
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதான அலுவலகம், கிழக்கு, வடக்கு, மத்திய மண்டலத்தில் தலா 5 மனு, மேற்கு மண்டலத் தில் 6 மனு, தெற்கு மண்டலத்தில் 4 மனு என மொத்தம் 30 மனுக்கள் மேயரிடம் வழங்கப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மண்டல உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.