கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் மற்றும் உதவி கமிஷனர் பெயர்களில், போலி கையெழுத்திட்டு, அங்கீகாரமற்ற மனையை வரன்முறை செய்து உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. இம்முறைகேடு தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் விசாரணையை துவக்கியுள்ளார்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனராக இருப்பவர் முத்துசாமி. இம்மண்டலத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும், உதவி கமிஷனரின் கையெழுத்தை போலியாக கோப்புகளில் இட்டு, உத்தரவுகள் வழங்குவது அடிக்கடி நடந்து வருகிறது.
அதேபோல், உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி, உதவி கமிஷனர் முத்துசாமி ஆகியோரது பெயர்களில் போலி கையெழுத்திட்டு, அங்கீகாரமற்ற மனையை வரன்முறை செய்து, உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த உத்தரவை ஆதாரமாக வைத்து, உள்ளூர் திட்ட குழும அலுவலகத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் விண்ணப்பித்து, கட்டட வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளது.
மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் சமர்ப்பித்த ஆவணங்களை சரிபார்த்தபோது, வரன்முறை செய்ததற்கான உத்தரவில் இருந்த கையெழுத்துகள், போலி என்பது கண்டறியப்பட்டது.
அந்த உத்தரவை தயாரித்து, வினியோகித்தது யார், உயரதிகாரிகள் கையெழுத்தை போலியாக போட வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பது தொடர்பாக, கிழக்கு மண்டல நகரமைப்பு அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு, இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டதும், உதவி கமிஷனர் முத்துசாமியிடம் விளக்கம் கேட்டுள்ளார். போலி கையெழுத்திட்டு வழங்கப்பட்ட உத்தரவு தொடர்பான, கோப்பு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல், ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவருக்கு, தணிக்கை தடை தொடர்பான கோப்பு ஒன்றை சரி செய்வதற்கு, உதவி கமிஷனர் கையெழுத்தை போலியாக போட்டு, ஒரு உத்தரவு வழங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
அதனால், மோசடி உத்தரவு வழங்கிய, நகரமைப்பு பிரிவு இளநிலை உதவியாளர் மற்றும் உடந்தையாக செயல்பட்ட கட்டட அளவையர் ஆகியோர் மீது, துறை ரீதியான நடவடிக்கை மட்டுமின்றி, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.