கோவை; வெள்ளலுார் குப்பை கிடங்கு வழக்கில், செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யாததால், கோவை மாநகராட்சி நிர்வாகத்தை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.
கோவை மாநகர பகுதியில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், 150 ஏக்கரில் கொட்டப்படுகிறது. அதனால், சுற்றுப்புறச்சூழல், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டிருக்கிறது. குப்பை கிடங்கை வேறிடத்துக்கு மாற்றக்கோரி, வெள்ளலுார் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சில நாட்களுக்கு முன் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
குப்பை கிடங்கை மூடக்கோரி, மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன், குறிச்சி – வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன் ஆகியோர் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக, பசுமை தீர்ப்பாயமே தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இம்மூன்று வழக்கையும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ஒருங்கிணைத்து விசாரித்து வருகிறது.
இதற்கு முன் நடத்தப்பட்ட விசாரணையின் போது, திறந்தவெளியில் குப்பையை கொட்டக்கூடாதென உத்தரவிட்ட தீர்ப்பாயம், செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. 98 பக்கத்துக்கு மாநகராட்சி தரப்பில் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டது. அறிக்கை நகல் மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டது; தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க மாநகராட்சி நிர்வாகம் தவறி விட்டது.
இச்சூழலில், அவ்வழக்கு பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மோகன் மற்றும் ஈஸ்வரன் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகினர். மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராகவில்லை. ஜூனியர் வக்கீல் மட்டும் வந்திருந்தார். செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யாததால், கடிந்துகொண்ட நீதிபதி, ‘பிப்., 5க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; இல்லையெனில், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும்’ என, மாநகராட்சி நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.
‘தயாராக இருந்தோம்’
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, ”வழக்கில் ஆஜராக மூன்று அதிகாரிகள் தயாராக இருந்தனர். வழக்கு தள்ளிப்போகும் என வக்கீல் தரப்பில் தெரிவித்ததால், சென்னை செல்லவில்லை. அறிக்கை தயாராக இருக்கிறது. மூன்று மாதத்துக்குள் எடுத்த நடவடிக்கை தொடர்பான அறிக்கையும் கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையும் சேர்த்து தாக்கல் செய்யப்படும்,” என்றார்.