மாடி வீட்டு தோட்ட வேளாண் தொகுப்பு: டியூகாஸில் அறிமுகம்

0
14

பெ.நா.பாளையம்; துடியலூரில் உள்ள துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் (டியூகாஸ்) மாடி வீட்டு தோட்ட உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.

துடியலூரில் உள்ள டியூகாஸ் நிறுவனம் துவங்கி, 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி கூட்டுறவு துறையில் முதல் முதலாக கூட்டுறவு நாற்றுப்பண்ணை அமைத்து உறுப்பினர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், பூச்செடிகள், மூலிகை செடிகள், மர வகைகள் உள்ளிட்ட நாற்றுக்கள் விற்பனை துவக்கப்பட்டுள்ளது.

மேலும், உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் மாடி வீட்டு தோட்டங்களுக்கு தேவையான மஞ்சி தொகுப்பு, செடி வளர்க்கும் பைகள், காய்கறி விதைகள் உட்பட சிறு வேளாண் உபகரணங்களை உள்ளடக்கி, 12 வகையான பொருட்களைக் கொண்ட மாடி வீட்டு தோட்ட வேளாண் உபகரண தொகுப்பு ஒன்று, 1,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டியூகாஸ் நிறுவனம், தமிழகம் முழுவதும் வியாபாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிறுவனம் தனது வியாபாரத்தை மேம்பாடு செய்யவும், விவசாயிகளுக்கும் தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு காணொளி வாயிலாக ஸ்தாபனம் இடம், பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றை காட்சிப்படுத்தி தெரிந்து கொள்ளும் விதமாக எல்.இ.டி., ‘டிவி’ மற்றும் காட்சிபெட்டி வசதியுடன் விளம்பர வாகனம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் அசோகா வேப்பம் பவுடர் இயற்கை உரத்தின் விற்பனையை அதிகப்படுத்தவும், விவசாயிகளுக்கு வேப்பம் பவுடர் சப்ளை செய்திடவும், புதிய வேப்பம் பவுடர் அரவை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த நான்கு திட்டங்களையும் டியூகாஸ் நிர்வாக இயக்குனர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், கோவை மாவட்ட வேளாண் உற்பத்தி குழு உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.