ஆனைமலை; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து, ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் காணிக்கையாக பெற்ற, 28 கிலோ, 906 கிராம் பொன் இனங்கள், பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக மத்திய அரசின் உருக்கு ஆலைக்கு ஒப்படைக்கும் பணி நேற்று நடந்தது.
அதில், பங்கேற்ற ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதில், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், அறங்காவலர்கள் மஞ்சுளாதேவி, தங்கமணி, திருமுருகன், மருதமுத்து மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கோவில் வளர்ச்சிக்கான திட்டங்கள், பணிகள் குறித்து கேட்டறிந்தார். கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டித்தருவதற்காக ஆயத்தப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதற்கு, அறங்காவலர் குழு தலைவர், அதிகாரிகள், கருணை இல்லம் செயல்பட்ட பகுதியில் குடியிருப்பு கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்வதாகவும், மண்டபம் உள்ள பகுதியில், தங்கும் விடுதி கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, கோவிலில், 3.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் ஓய்வு மண்டப பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்.
மேலும், பெடரல் வங்கி வழங்கிய பேட்டரி வாகனத்தை பார்வையிட்டு, வங்கி அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.