மாசாணியம்மன் குண்டம் விழா 81 அடி உயர கொடி மரம் வந்தது

0
6

ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவுக்கு, 81 அடி உயரமுள்ள கொடிமரம் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.

பொள்ளாச்சி அடுத்துள்ள, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாளை, 29ம் தேதி தை மாதம் அமாவாசையன்று, கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது.

இதற்காக, சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து கொடிமரம் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், சர்க்கார்பதி வனப்பகுதிக்கு சென்றனர். அங்கிருந்து, 81 அடி உயரமுள்ள முதிர்ந்த மூங்கில் மரம், கொடிமரத்துக்காக தேர்வு செய்தனர்.

சர்க்கார்பதி அருகிலுள்ள மாரியம்மன் கோவிலில், கொடிமரத்துக்கு மஞ்சள், குங்குமம் பூசப்பட்டு, புடவை சுற்றி சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்பின், கொடிமரத்தை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு, 17 கி.மீ., துாரம் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

விழாவில், வரும், பிப்., 11ம் தேதி, நள்ளிரவு மயான பூஜை நடக்கிறது. பிப்., 12ல், சக்தி கும்பஸ்தாபனம், மற்றும் மகா பூஜை, 13ல் குண்டம் கட்டுதல், சித்திரத்தேர் வடம் பிடித்தல், குண்டம் பூ வளர்த்தல் நடக்கிறது.

பிப்., 14ம் தேதி கங்கணம் கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள், பூக்குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 15ம் தேதி, கொடி இறக்குதல், மஞ்சள் நீராடல், மகா முனி பூஜை நடக்கிறது. 16ம் தேதி, மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவடைகிறது.