பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.சிவபெருமானுக்கு நான்கு காலம் அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடு நடந்தது.
இரவு முழுவதும் கோவிலில் குவிந்த பக்தர்கள், கண் விழித்து, சிவ பெருமானை துதித்து வழிபட்டனர். பல கோவில்களில், பரத நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர் சன்னதியில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர், தேன், சந்தனம், திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், அரிசிமாவு போன்ற, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து துர்க்கை அம்மன், மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு சிறப்பு பூஜையும் நடந்தது.
இதேபோன்று, நான்கு கால சிறப்பு அலங்கார பூஜை, மஹா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோன்று, வால்பாறையிலுள்ள மற்ற கோவிலில்களில் சிவராத்திரி வழிபாடு நடந்தது.
* உடுமலை திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை திருச்சப்பரம் கோவிலுக்கு வந்ததும், சிறப்பு பூஜைகள் செய்து, மூலவர் கோபுரமாக நிறுவப்பட்டது.
நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, நான்காம் கால பூஜை, அபிேஷகம், தீபாரதனை நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம், 16 தீப தரிசனமான சோடஷ உபசார தீபாராதனை நடந்தது. இரவு முழுவதும் கோவில் வளாகத்தில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
* கடத்துார் கோமதியம்மன் உடனமர் அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் நான்கு கால பூஜை நடந்தது. ஒவ்வொரு ஜாமத்திற்கும், தனித்தனியாக ஹோமம், அபிேஷகம் ,அலங்கார பூஜை, பாராயணம் என, மகா சிவராத்திரி விழா நடந்தது.
* உடுமலை காந்திநகர், வரசித்தி விநாயகர் கோவிலில் உள்ள, சவுந்திரநாயகி உடனமர் சுந்தரேஸ்வரர் கோவிலில், இரவு முழுவதும் நான்கு கால வேள்வி, பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. சுவாமிக்கு, வில்வம், தாமரை, ஜாதிமல்லி, நந்தியாவட்டை பூக்களால் ஆராதனை நடந்தது.
* குறிச்சிக்கோட்டை ராமேகவுண்டன்புதுார், ஸ்ரீ சிவலிங்கேஷ்வரர் கோவில், தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்கள், அம்மன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
– நிருபர் குழு –