மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் சுற்றுலா பயணியருக்கு வனத்துறை எச்சரிக்கை

0
64

வால்பாறை: வால்பாறை மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், சுற்றுலா பயணியர் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும், என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளில், பருவமழைக்கு பின் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக,வாகமலை, சிறுகுன்றா, சங்கிலி ரோடு, செலாளிப்பாறை, சின்கோனா, புதுத்தோட்டம், வாட்டர்பால்ஸ், கவர்க்கல் எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.

இது தவிர, வால்பாறை – ஆழியாறு மலைப்பாதையிலும் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால், காலை, மாலை நேரங்களில் கடும் பனிமூட்டமும், பகல் நேரத்தில் கடும் வெயிலும் நிலவுகிறது.

இதனால், யானைகள் பகல் நேரத்தில் தண்ணீர் மற்றும் உணவு தேடி ரோட்டை கடக்கின்றன. இந்நிலையில், மலைப்பாதையில் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணியர் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும்.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வால்பாறை – ஆழியாறு மலைப்பாதையில் யானைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. நேற்று முன்தினம் இரவு ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி மைக்கேல்,77, என்பவர் வாட்டர்பால்ஸ், டைகர் பள்ளத்தாக்கு அருகே, பைக்கில் சென்று யானை மீது மோதியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த யானை தாக்கியதில் அவர் இறந்தார்.

இது போன்ற, துயர சம்பவங்கள் நடக்காமல் இருக்க, சுற்றுலா பயணியர் யானைகள் நடமாடும் பகுதியில், மிகுந்த கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். யானைக்கு அருகில் செல்லவோ, ‘செல்பி’ எடுக்கவோ கூடாது. மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, கூறினர்.

‘டிரக்கிங்’ செல்ல தடை!

வால்பாறையில், தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் குளுகுளு சீசன் நிலவுகிறது. இதனால் இயற்கையையும், இங்குள்ள வன விலங்குகளையும் கண்டு ரசிக்க சுற்றுலா பயணியர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.தங்கும் விடுதியில் இரவு நேரத்தில் தங்கும் சுற்றுலா பயணியரை, வன விலங்குகளை காணலாம் என, சிலர் வாகனங்களில் வனப்பகுதிக்கு அழைத்து செல்வதும், ‘டிரக்கிங்’ செல்வதும் அதிகரித்துள்ளது. இது போன்ற சம்பவம் நடைபெறுவது கண்டறியப்பட்டால், வாகனம் பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கப்படும், என, வனத்துறையினர் தெரிவித்தனர்.