மர்ம காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: நோய் தடுப்பு பணிகள் தீவிரம்

0
69

மர்ம காய்ச்சல் பரவல்

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. தற்போது வால்பாறை பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இந்த காலசூழ்நிலை மாற்றம் காரணமாக வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் பலர் மா்ம காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

அரசு ஆஸ்பத்திரி தனியார் கிளினிக்குகளில் காய்ச்சல் தாக்குதலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை தொடர்ந்து வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆணையாளர் பாலு உத்தரவின் பேரில் துப்புரவு அதிகாரி செல்வராஜ் முன்னிலையில் வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் தீவிர சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தடுப்பு பணிகள் தீவிரம்

நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் அடைபட்டு கிடந்த கழிவுநீர் சாக்கடைகள் சுத்தம் செய்து கிருமிநாசிகள் தெளிக்கப்பட்டு குடியிருப்பு பகுதியில் கொசு மருந்துகள் அடிக்கப்பட்டு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களுக்கு காய்ச்சி கொதிக்க வைத்த குடிதண்ணீர் பயன்படுத்துவது, குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் சாக்கடை நீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்வது, சளி காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

வெளியூர்களில் இருந்து வரக்கூடியவர்களுக்கு சளி காய்ச்சல் இருந்தால் அது குறித்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ பணியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.