தைப்பூச திருவிழாவையொட்டி மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தைப்பூச திருவிழா
முருகப்பெருமானின் 7-வது படை வீடாக கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் பக்தர்களால் போற்றப் படுகிறது. இந்த கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடி யேற்றம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தியுடன் விழா தொடங்கியது.
தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதி காலை 6 மணிக்கு கோபூஜை நடைபெற்றது. அதன்பிறகு கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது போன்ற 16 வகை திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.
காப்பு கட்டுதல்
வைரக்கல் அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி காட்சி அளித்தார். இதையடுத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண மலர்களாலும் மாவிலை தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கோவிலின் முன்பிரகார மண்டபத்தில் சிவாச்சாரியார்களால் வேள்வி பூஜை நடைபெற்றது.
மேலும் விநாயகர் பூஜை, புண்யாகம், மண் எடுத்தல், முளைப் பாரி இடுதல், மருதாசல மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் வள்ளி தெய்வா னை சமேத சுப்பிரமணிய சுவாமி, விநாயகர், வீரபாகு தேவர், சூலத் தேவர் ஆகியோரோடு கற்பகத்தரு வாகனத்தில் கொடிமரம் முன்பு உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.
கொடியேற்றம்
காலை 7 மணிக்கு கோவில் முன்புறம் உள்ள கொடி மரத்தின் முன்பு மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் அரோகரா கோஷமிட்டனர்.
அப்போது சூரியன், சந்திரன், வேல், சேவல், சின்னம் பொறிக்கப்பட்ட கிருத்திகை கொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கொடிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு காலை 7.30 மணிக்கு கிருத்திகைக்கொடி கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மருதமலை முருகனுக்கு அரோகரா, வேலவனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். கொடிமரத்திற்கு தீபாராதனை நடைபெற்றது.
யாக பூஜைகள்
சுப்பிரமணியசாமி, வள்ளி, தெய்வானை விநாயகர், வீரபாகு தேவர், சூலத் தேவர் ஆகியோரோடு கற்பகத்தரு வாகனத்தில் கோவிலை சுற்றி வீதி உலா வந்தார். தைப்பூச திருவிழா நடைபெறும் 10 நாட்களும் கோவிலில் காலையிலும், மாலையிலும் யாக பூஜை நடைபெறுகிறது.