மருதமலை கோவிலில் தேனீ கொட்டியதில் பக்தர்கள் காயம்

0
15

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பாம்பாட்டி சித்தர் குகை அருகே தேன்கூடு கலைந்து, 30க்கும் மேற்பட்ட பக்தர்களை தேனீ கொட்டிய போதும், கோவில் பணியாளர்கள் உதவிக்கு வரவில்லை என, பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தென் திசையில், பாம்பாட்டி சித்தர் குகை அமைந்துள்ளது.

பாம்பாட்டி சித்தர் சன்னதியில், பவுர்ணமி குருபூஜை நடந்ததால், காலை, 8:00 மணிக்கு, பக்தர்கள், வெளியூரிலிருந்து வந்திருந்த சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் 50-க்கும் மேற்பட்டோர், குருபூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அருகில் இருந்த மரத்தில், மிகப்பெரிய தேன் கூடு இருந்துள்ளது. புகை மூட்டத்தால், தேன்கூடு கலைந்து, நூற்றுக்கணக்கான தேனீக்கள் அங்கிருந்த பக்தர்களை கொட்ட துவங்கியது.

இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் விரைந்து வந்து தேனீக்களை விரட்டினர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.