மருதமலை கோவிலில் கும்பாபிஷேக பணிகள்

0
4

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

முருகனின் ஏழாம் படைவீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், வரும் ஏப்ரல் 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதற்காக கடந்த ஜனவரி 20ம் தேதி, பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் துவங்கப்பட்டன. ராஜகோபுரம், மூலஸ்தானம், ஆதி மூலஸ்தானம், மற்ற சன்னதிகள், படிக்கட்டு பாதையில் உள்ள சன்னதிகள் ஆகியவற்றில், வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.

ராஜகோபுரம் மற்றும் மற்ற சன்னதியில் இருந்த, 16 பழைய கலசங்கள் அகற்றப்பட்டுள்ளன. புதிய கலசங்கள் வந்தவுடன், அதை பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. கோவில் வளாகத்தில், யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.

சன்னதிகளின் மேல்தளத்தில், மழைநீர் உள் புகாதவாறு, சூரிய ஒளி பிரதிபலிப்பு ஓடுகள் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

யாகசாலை மண்டப பணிகள், வரும், 25ம் தேதிக்குள் நிறைவடையும்.

வசந்த மண்டப பணிகளும், 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

கும்பாபிஷேக பணிகள் இன்னும் ஒரு வாரத்தில், முழுவதுமாக செய்து முடிக்கப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.