வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் வெகு சிறப்பாக நடந்தது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும், தைப்பூச தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு தைப்பூச தேர் திருவிழா, ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜை மற்றும் திருவீதி உலா நடந்தது. பத்து நாள் தைப்பூச திருவிழாவின், ஆறாம் நாளான நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 16 வகையான திரவியங்கள் கொண்டு, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். பகல், 12:10 மணி முதல் 12:30 மணி வரை, தைப்பூச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், விநாயகர் பூஜை, கங்கணம் கட்டுதல், கலச பூஜை, பட்டு வஸ்திரம் சாத்துதல், தாரை வார்த்து கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. பகல், 12:23 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடந்தது. தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை சமேதராய், கண்ணாடி மஞ்சத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருக்கல்யாண உற்சவத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேர் வடம் பிடித்தல், இன்று, காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.