கோவை ; மரப்பாலத்தில் ரயில்வே கீழ் பாலப்பணிகள் நடக்க இருப்ப தால் இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை – பாலக்காடு ரோட்டில் மரப்பாலத்தில் அமைந்துள்ள ரயில்வே கீழ் பாலம் கட்டும் பணி நடக்க உள்ளது.
இதை முன்னிட்டு, கோவையில் இருந்து க.க.சாவடி, வாளையாறு மற்றும் பாலக்காடு செல்லும் கனரக, இலகுரக வாகனங்கள் அனைத்தும் மரப்பாலம் ரோடு கீழ் பாலம் வழியாக செல்ல இயலாது.
பஸ் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் மதுக்கரை சந்திப்பில் இடது புறம் திரும்பி குவாரி ஆபீஸ் ரோடு, குரும்பபாளையம் ரோடு, மதுக்கரை மார்க்கெட் ரோடு, செட்டிபாளையம் ரோடு வழியாக, செட்டிபாளையம் பிரிவுக்கு செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் இந்த ரோட்டில் செல்ல அனுமதி இல்லை.வாளையாறு, பாலக்காட்டிலிருந்து, கோவை, குனியமுத்தூர், உக்கடம் செல்லும் பஸ், இலகுரக வாகனங்கள் மட்டும் செட்டிபாளையம் பிரிவு, விறகுக்கடை பாலம் வழியாக சென்று ஏ.சி.சி., சிமெண்ட் நிறுவனம் ரோடு வழியாக செல்ல வேண்டும். கனரக வாகனங்களுக்கு இந்த ரோட்டில் அனுமதி இல்லை.
கோவையில் இருந்து க.க.சாவடி, வாளையாறு மற்றும் பாலக்காடு செல்லும் கனரக வாகனங்கள் ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி குறிச்சி, ஈச்சனாரி ரோடு வழியாக சென்று(என்.எச்., 544) சேலம் – கொச்சின் ரோட்டில், கற்பகம் கல்லுாரி சந்திப்பில் வலது புறம் திரும்பி செல்ல வேண்டும். மேலும் வாளையாறு மற்றும் பாலக்காட்டிலிருந்து என்.எச்., 544ல் கோவைக்கு வரும் கனரக வாகனங்கள், கற்பகம் கல்லுாரி, பொள்ளாச்சி ரோடு சந்திப்பில் இடது புறம் திரும்பி, என்.எச்., 948ல் ஈச்சனாரி, குறிச்சி ரோடு வழியாக, ஆத்துபாலம் சந்திப்புக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.