கோவை, பிப். 28: கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் (46). இவர் கவுண்டம்பாளையம் கந்தசாமி வீதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடையில் திடீரென தீப்பிடித்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பக்கத்து கடையை சேர்ந்த வினோத் என்பவர் சங்கரேஸ்வரனுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.
இருவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இதில் மரக்கடைக்கு அருகில் இருந்த பஞ்சர் கடைக்கும் தீ லேசாக பரவியது. இந்த தீ விபத்தில் மரக்கடையில் இருந்த ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. இது குறித்து சங்கரேஸ்வரன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.