மன அழுத்தம் வருவதற்கு காரணம் வீட்டுச் சூழலா… வெளிச் சூழலா?

0
6

கடந்த காலங்களுக்குள் மீண்டும் செல்ல, ஏதாவது ஒரு மாயாஜால வித்தை இருந்தால், எந்தவித மன உளைச்சல், எதிர்பார்ப்பு இல்லாத, குழந்தைப் பருவத்துக்கு போக தான் ஆசை துளிர்விடும். அந்த வாழ்க்கையில் சிரிப்பு தான் முதன்மை.

அப்படியே வளர்ந்து, நமக்கென்று ஒரு பொறுப்பு வரும் போது, எதிர்கால சிந்தனையை சுமந்து, அதை நோக்கிய பயணம், மனதை அப்படியே அழுத்துகிறது. கொஞ்சம், கொஞ்சமாக, ஆனந்த சிரிப்பை தொலைக்கிறோம். மனதுக்குள் அடைக்கலம் புகும் மன உளைச்சல்.

ஆனால், சிரிப்பு மருந்தை அளித்துக் கொண்டே இருக்க வேண்டும் என, கோவை நகைச்சுவை சங்கம், நான்காம் ஆண்டு தொடக்கவிழா மெகா பட்டிமன்றம், சமீபத்தில் நடந்தது.

பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா தலைமையில், ‘மன அழுத்தம் வருவதற்கு பெரிதும் காரணம் வீட்டுச்சூழலா? வெளிச்சூழலா?’ என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடந்தது.

வீட்டுச்சூழல் அணியில் அருள்பிரகாஷ், ராகவேந்திரன், பாரதி பாஸ்கர் ஆகியோரும், வெளிச்சூழல் அணியில் சேஷாத்ரி, தெய்வானை, ராஜா ஆகியோரும் பேசினர்.

ஒவ்வொருவரின் பேச்சிலும், நகைச்சுவை தான் பிரதானமாக இருந்தது. பார்வையாளர்களை சிரிப்பு அமர்க்களப்படுத்தியது.

இயற்கையிலேயே நம்மிடம் மருந்து இருக்க, வெளியில் ஏன் தேடிப்போவானேன் என்ற கேள்வியும் எழுந்தது. மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்த நிம்மதியும், இப்படி சிரித்து எவ்வளவு நாள் ஆச்சு என்ற ஆச்சரியமும் கலந்த கலவையாக, இந்நிகழ்ச்சி இருந்தது.

‘வெளிச்சூழலை காட்டிலும், மன அழுத்தம் வர பெரிதும் காரணம் வீட்டுச் சூழலே’ என நடுவர் தீர்ப்பு வழங்கினார்.