மது போதையில் ஆற்றில் மூழ்கிய வாலிபர் மரணம்

0
9

தொண்டாமுத்தூர்; நொய்யல் ஆறு, சித்திரைச்சாவடி தடுப்பணையில், புத்தாண்டை கொண்டாட வந்த வாலிபர், மது போதையில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

குனியமுத்தூர், திருநகர் காலனியை சேர்ந்தவர் கதிரேசன், 40. இவர் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். ஆங்கில புத்தாண்டை கொண்டாட, நேற்று மாலை தனது நண்பர்களுடன் நொய்யல் ஆறு, சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு வந்துள்ளார்.

அங்கு நண்பர்கள் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் இருந்த கதிரேசன், உயரமான பகுதியில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார். அப்போது, கதிரேசனுக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது. இதனால், தண்ணீரில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்துள்ளார்.

இதனைக்கண்ட அவரது நண்பர்கள், அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். அதற்குள், கதிரேசன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற ஆலாந்துறை போலீசார், உடலை மீட்டனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.