மங்களூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக ராமசுவரத்துக்கு ரெயில் இயக்கப்படும் – அதிகாரிகள் தகவல்

0
121

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பாலக்காடு கோட்ட வர்த்தக பிரிவு ஆய்வாளர் ராம்குமார் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் ரெயில்வே துறையின் வருமானத்தை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்க ஒரு கவுன்டர் மட்டும் செயல்படுகிறது. இதனால் கோவை, திருச்செந்தூர் ரெயில்களை ஏராளமான பயணிகள் தவற விடுகின்றனர். எனவே கூடுதலாக டிக்கெட் கவுன்டர் அமைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினார்கள். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:–

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் தற்போது முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லாத என 2 டிக்கெட் கவுன்டர்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு டிக்கெட் கவுன்டர் செயல்படுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே முன்பதிவு டிக்கெட் கவுன்டரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். இந்த டிக்கெட் கவுன்டரில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை வாங்கி கொள்ளலாம். இதை தவிர தானியங்கி முறையில் டிக்கெட் பெறும் திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் இன்னும் 2 மாத காலத்துக்குள் நடைமுறைக்கு வர உள்ளது. வாகன நிறுத்தும் இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு மேற்கூரை அமைக்க முன்வரும் ஒப்பந்ததாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்படும். மேற்கூரை அமைத்தால் வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ரெயிலை ஓட்டி வரும் டிரைவர் மற்றும் பயணிகளுக்கு இடையூறு இல்லாத இடங்களில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதி அளிக்கப்படும். மீட்டர் கேஜ் ரெயில் பாதை இருக்கும் போது இயங்கிய ரெயில்களை மீண்டும் இயக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. கோவை– பொள்ளாச்சி, பொள்ளாச்சி– பாலக்காடு, மங்களூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக ராமமேசுவரத்துக்கு ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் மங்களூர்– ராமேசுவரம் ரெயில் இந்த ஆண்டு அட்டணையில் வந்து இருக்க கூடும். அதற்குள் கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் மற்ற ரெயில்களில் நேரம் ஆகியவற்றால் காலதாமதம் ஆகி விட்டது. இன்னும் 6 மாத காலத்திற்குள் மங்களூர்–ராமேசுவரம் ரெயில் இயக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.