மக்களிடம் குறைகள் தீரவில்லை: குறைதீர் நாளில் குவிந்த மனுக்கள்

0
19

கோவை; கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 451 மனுக்கள் வந்தன. அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.

கோவை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் கிராந்திகுமார் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல மனுக்களை, பொதுமக்கள் அளித்தனர்.

இலவச வீடு வேண்டி 101 மனுக்களும், வீட்டுமனைப் பட்டா வேண்டி 160, வேலைவாய்ப்பு வேண்டி, 7, இதர மனுக்கள் 183 என மொத்தம் 451 மனுக்கள் வந்தன.

சமூகப் பாதுகாப்பு திட்டம் சார்பில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் மூன்று பேருக்கு, நிவாரண தொகையாக, ரூ.3 லட்சத்துக்கான செக்குகளை, கலெக்டர் கிராந்தி குமார் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கித் குமார் ஜெயின், துணை கலெக்டர் (பயிற்சி) மதுஅபிநயா, தனித்துணை கலெக்டர் சுரேஷ் (சமூக பாதுகாப்பு திட்டம்), மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரேகா உள்ளிட்ட, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.