வார்தா,
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி மராட்டிய மாநிலம் வார்தாவில் உள்ள காந்தி சேவாசிரமத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் இன்று வருகை தந்தனர். அங்கு நடந்த பிரார்த்தனை கூட்டம் மற்றும் ‘காந்தி சங்கல்ப யாத்திரை’ என்ற அமைதி பேரணியில் கலந்து கொண்டார் ராகுல் காந்தி. பின்னர் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
“மகாத்மா காந்தி இந்தியாவின் ஒற்றுமைக்காக பணியாற்றினார், ஆனால் மோடியோ பிளவுப்படுத்துவதற்காக பணியாற்றி வருகிறார்,” என விமர்சனம் செய்தார்.
“இந்தியாவை ஒருங்கிணைப்பது பற்றி மகாத்மா காந்தி பேசினார், ஆனால் மோடி பிரிக்கிறார்… ஒரு சமுதாயத்தை மற்றொரு சமுதாயத்திற்கு எதிராக பிரதமர் மோடி தூண்டிவிடுகிறார்,” என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, அவர் அதுகுறித்து பேச வேண்டும் என்றார். ரபேல் போர் விமானம் விவகாரத்தில் அரசு நிறுவனத்தை புறக்கணித்துவிட்டு அம்பானியின் நிறுவனத்தை தேர்வு செய்தது ஏன்? என்பதை விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது என்னுடைய கண்களை பார்க்க பிரதமர் மோடி தயங்கினார். பொய் கூறியதால் அவரால் பார்க்க முடியவில்லை என்று சாடியுள்ளார் ராகுல் காந்தி.