மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கபடி; மாநில போட்டிக்கு ஈரோடு அணி தகுதி

0
4

கோவை; மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பன்முக கலாசார போட்டியின் ஒரு பகுதியாக, நடந்த கபடி போட்டியில், ஈரோடு அணி மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் திட்டம் செயல்படுகிறது. இதில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்துக்கும், வருமானத்துக்கும் வழிவகுக்கப்படுகிறது.

தவிர, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பன்முக கலாசார போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. அதன்படி, ஊரக, வட்டாரம், மாவட்டத்தை அடுத்து கடந்த இரு நாட்கள் மண்டல அளவிலான போட்டிகள், மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டன.

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கு கபடி, கோ-கோ, கோலப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. கோவை நேரு ஸ்டேடியம் அருகே மாநகராட்சி மைதானத்தில், நேற்று கபடி போட்டி நடந்தது. இதில் நான்கு மாவட்ட அணிகளும் விளையாடின.

முதல் போட்டியில், கோவை அணி, 28-25 என்ற புள்ளி கணக்கில் நீலகிரி அணியையும், இரண்டாம் போட்டியில் ஈரோடு அணி, 38-4 என்ற புள்ளிகளில் திருப்பூர் அணியையும் வென்றன. இறுதிப்போட்டியில், கோவையும், ஈரோடு அணிகளும் மோதின.

துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஈரோடு அணியினர், 38-10 என்ற புள்ளி கணக்கில் கோவை அணியை வென்றனர்.

இதையடுத்து, சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு ஈரோடு அணி தகுதி பெற்றுள்ளது. கோவை மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் மதுரா, உதவி திட்ட இயக்குனர் லதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.