போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு

0
96

போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு

தொழில் வரி வசூலிப்பதை கண்டித்து அறிவிக்கப்பட்ட போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தேயிலை தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் தொழில் வரி வசூலிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாக தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கோவை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சம்பந்தப்பட்ட தேயிலை தோட்ட நிர்வாகங்கள் வருகிற ஜனவரி மாதம் வரை தொழில் வரி பிடித்தம் செய்ய கூடாது என்றும், தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் சப்-கலெக்டர் கூறினார். இதில் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம், தாசில்தார் விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் பாலு, தேயிலை தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் வால்பாறை அமீது, தோட்ட அதிபர் சங்க தலைவர் விநாயக திம்பையா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

போராட்டங்கள் ஒத்திவைப்பு

தொடர்ந்து பொள்ளாச்சியில் தேயிலை தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு அவசர கூட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பு தலைவர் வால்பாறை அமீது தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது. இதில் எல்.பி.எப். வினோத்குமார், சரவணபாண்டியன், ஏ.ஐ.டி.யு.சி. மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வீரமணி, கேசவமுருகன், பா.ஜனதா தங்கவேல், செந்தில்முருகன், கவுன்சிலர் மணிகண்டன், வர்கீஸ் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூட்டமைப்பு தலைவர் வால்பாறை அமீது கூறுகையில், சப்-கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஜனவரி மாதம் வரை தொழில் வரி வசூலிப்பதை நிறுத்தி வைப்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை ஏற்று நாளை (வியாழக்கிழமை) வாட்டர் பால்ஸ், 19-ந்தேதி கருமலை, 20-ந்தேதி சோலையாறு, 23-ந்தேதி கோவையில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட அதிபர் சங்க அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் மற்றும் 27-ந்தேதி அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டமும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.