போத்தனுார் ரயில்வே தண்டவாளத்தை கடந்து குழாய்கள் கொண்டு செல்லும் பணி ‘விறுவிறு

0
4

கோவை; குறிச்சி – குனியமுத்துார் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களில், போத்தனுார் ரயில்வே தண்டவாளங்களை கடந்து, குழாய்களை கொண்டு செல்வதற்கான பணிகள் ரயில்வே நிர்வாகம் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. வரும் ஏப்., 15க்குள் பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில், குறிச்சி – குனியமுத்துார் பகுதிக்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தில், கழிவு சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.

குறிச்சி, குனியமுத்துார் பகுதியில் இருந்து தருவிக்கப்படும் கழிவு நீரை, சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்ல, போத்தனுார் ரயில்வே தண்டவாள பகுதிகளை கடக்க வேண்டும். இதேபோல், குடிநீர் குழாயும் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

இதற்காக, பொள்ளாச்சிக்கான ரயில்வே பாதையில், ‘டிரெஞ்லெஸ்’ முறையில் தண்டவாளத்துக்கு கீழ் துளையிட்டு, கான்கிரீட் பாக்ஸ் சொருகப்பட்டு இருக்கிறது. ‘எல்’ வடிவில் அருகாமையில் கான்கிரீட் பாக்ஸ் கட்டி, அதற்குள் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.

பாலக்காடு ரயில்வே பாதையில், மேம்பாலம் ஸ்டைலில் இரு பகுதியில் இரும்பு துாண்கள் அமைத்து கர்டர் வைத்து குழாய்கள் அமைக்கப்படுகின்றன. இப்பணி, ரயில்வே நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

இரண்டு மணி நேரம் இவ்வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைத்து, இப்பணி மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டுள்ளது. குழாய்கள் பதிக்கும் பணியை, ஏப்., 15க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நிர்வாக பொறியாளர் இளங்கோவன், குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் கீதா தேவி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.