கோவை; கல்லுாரி மாணவர்களுக்கு விற்க மகாராஷ்டிராவில் இருந்து போதை மாத்திரைகளை கடத்திய மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2020 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெளிமாநிலத்தில் இருந்து போதை மாத்திரை கடத்தி வரப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை ரயில்வே ஸ்டேஷனில் நேற்று முன்தினம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில்வே ஸ்டேஷனில் இருந்து செல்லும் மண் ரோட்டில் கையில் பையுடன் மூவர் நின்றிருந்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், பையில், ஏராளமான போதை மாத்திரைகள் இருந்தன. இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள், கோவை தெற்கு உக்கடத்தை சேர்ந்த முகமது தாரிக், 24, சன்பர் ரகுமான், 23, போத்தனுாரை சேர்ந்த சாதிக், 25, எனத் தெரிந்தது. முகமது தாரிக், சாதிக் ஆகியோர் மீன் வியாபாரம் செய்வதும், சன்பர் ரகுமான் லோடு மேனாக பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. கடந்த ஆறு மாதங்களாக, மூவரும், இணைந்து வடமாநிலங்களுக்கு சென்று போதை மாத்திரைகளை வாங்கி வந்து, கோவையில் கல்லுாரி மாணவர்களிடம் விற்பனை செய்து வந்தது தெரிந்தது. தற்போது, மகாராஷ்டிராவுக்கு சென்ற மூவரும் அங்கு இவர்களுக்கு அறிமுகமான மருந்துக்கடைகளில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் மூவரையும் சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் இருந்து, 2020 போதை மாத்திரைகள், தலா மூன்று ரயில் டிக்கெட்டுகள், மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களுக்கு போதை மாத்திரைகளை கொடுத்த மகாராஷ்டிராவில் உள்ள மருந்துக்கடைகள் குறித்தும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.