கோவை; கோட்டைமேடு, மன்பஉல் உலுாம் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ”இன்றைய தலைமுறைக்கு பெரியவர்களையும், ஆசிரியர்களையும் மதிக்க சொல்லிக்கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்களை வழிநடத்த வேண்டும்; ஆசிரியர்களை பெருமைப்படுத்த வேண்டும்.
மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு கல்வி, விளையாட்டு ஆகிய இரண்டுமே தேவை. தற்போது இளைஞர்களிடம் போதை பழக்கம் என்பது, போலீசாருக்கு சவாலாக உள்ளது. இதை தடுக்க, கல்வி சார்ந்த விஷயங்களில் மாணவர்களை, அதிகம் முன்னெடுக்க வேண்டும்,” என்றார்.
முன்னாள் மாவட்ட நீதிபதி முஹம்மது ஜியாவுதீன் பேசுகையில், ”மதங்களை கடந்து மானுடம் மலர வேண்டும். நாம் முன்னோக்கி செல்லும்போது, பின்னால் இருந்து விமர்சிப்பவர்களை கவனிக்கக்கூடாது. செயல்பட நினைப்பவர்கள் செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நம் பெற்றோரை நாம் கவனித்துக் கொள்வதுபோல், நம்மை வளர்த்த பள்ளியையும், கவனிப்பது நமது கடமை,” என்றார். ஹிதாயத்துல் இஸ்லாம்ஷாபிய்யா ஜமாஅத் தலைவர் இனாயத்துல்லா, பள்ளி தாளாளர்கள் நிசார் அகமது, கலீல் ரஹ்மான் உட்பட பலர் பங்கேற்றனர்.