கோவை மாநகரில் விபத்து ஏற்படாமல் தடுக்க போக்குவரத்து விதிகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளுக்கு போலீசார் நூதன தண்டனை விதித்தனர். மேலும் ரூ.1000 அபராதம் விதித்தனர்.
போக்குவரத்து விதிமீறல்
போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் விபத்துகளை தடுக்க முடியும். எனவே வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என போலீசார் தன்னார்வலர்களுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
மேலும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமலும், செல்போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
வாகன சோதனை
இந்த நிலையில் கோவை மாநகரில் காந்திபுரம், லட்சுமி மில் சந்திப்பு, காளப்பட்டி ரோடு, பாலக்காடு ரோடு உள்பட 15 இடங்களில் நேற்று போலீசார், பள்ளி, கல்லூரி, மாணவ -மாண விகள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து விபத்தில்லா கோவையை உருவாக்கும் வகையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா காலனி சிக்னல் அருகே போலீசார் முகாம் அமைத்து வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ரூ.1000 அபராதம்
அப்போது, அந்த வழியாக சாலை விதிகளை பின்பற்றாமல் வந்த வாகன ஓட்டுனர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களை வரிசையாக நிற்க வைத்து சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வைத்தனர். அதன்படி அவர்களை தங்களின் கைகளை முன்நோக்கி நீட்டி போலீசார் கூறியவற்றை திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதற்கிடையே இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியா மல் வந்தவர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. இது போல் இருசக்கர வாகனத்தில் செல்போனில் பேசியபடி செல்வது உள்பட போக்குவரத்து விதிகளை மீறி வந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.