கோவை: கோவையில் கடந்த பத்து மாதங்களில், பதிவான வாகனங்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை கடந்தது. இத்துடன், தற்போது கோவை மாவட்டத்தில் 33 லட்சத்து 99 ஆயிரத்து 292 வாகனங்கள் உள்ளன. ஆகவே,போக்குவரத்து உட்கட்டமைப்பை பெருக்க வேண்டும்; நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.
கோவையில்எட்டு ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் உள்ளன.நாளொன்றுக்கு (வார மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர) நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள், புதியதாக பதிவு செய்யப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாளொன்றுக்கு, 50 முதல் 75 வாகனங்களே பதிவாகும். ஆனால் தற்போது பதிவாகும் வாகனங்களின் எண்ணிக்கை, நுாறை கடந்து விட்டது. சுபமுகூர்த்தம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அதிக பட்சம், 175 வாகனங்கள் வரை பதிவாகின்றன.
காரணம் என்ன ?
மார்க்கெட்டில் புதிது, புதிதாக ஏராளமான வாகனங்கள் அறிமுகமாகின்றன. அதற்கு சலுகைகளும் தாராளமாக வழங்கப்படுகின்றன. வாகனங்களை இயக்குவதற்கு, பல சவுகரியங்களை ஒவ்வொரு நிறுவனங்களும், புதியதாக அறிமுகம் செய்கின்றன.
அதனால் இளைஞர்கள், இளம்பெண்களை போல வயதானவர்களும், கையாள எளிதாக உள்ள புதிய வாகனங்களையே, அதிகம் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானோர் ஒரு வாகனத்தை அதிக பட்சம், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அல்லது 50,000 கி.மீ.,க்கு மேல் பயன்படுத்துவதில்லை.
எக்சேஞ்ச் திட்டத்தில் கொடுத்துவிட்டு, புதிய வாகனத்தை ஓட்டி செல்கின்றனர். இதற்கேற்றபடி ஆங்கில மற்றும் தமிழ் புத்தாண்டு, பொங்கல் திருநாள், ஆடிதள்ளுபடி, தீபாவளி, ஆண்டு இறுதி ஆபர் வழங்கப்படுகிறது.
1,19,510 வாகனங்கள் பதிவு
கடந்த ஜன., முதல் அக்., வரையில் 1,19,510 வாகனங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 15 சதவீதம் அதிகம். இதே போன்று, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அதற்கேற்ப போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளை, கோவை மாநகர போலீசாரும், கோவை மாநகராட்சியும் இணைந்து, மேற்கொள்ள வேண்டும்.
இதன் வாயிலாக விபத்துக்களையும், உயிர்ப்பலிகளையும் தவிர்க்கவும், தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.