போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேட்டுப்பாளையம் சாலையில் மேலும் ஒரு மேம்பாலம் – ரூ.123 கோடியில் கட்டப்படுகிறது

0
93

கோவையில் முக்கிய சாலைகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதிலும் சாலை சந்திப்புகளில் சிக்னலுக்காக வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் ஒரு சிக்னலில் இருந்து அடுத்த சிக்னல் வரை வாகனங்கள் நிற்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது.

 

இதே போல கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஊட்டி பஸ் நிலையம் எதிரில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கிறது. இதனால் அந்த பஸ் நிலையத்துக்கு செல்லும் வாகனங்கள் வலதுபுறம் திரும்புவதற்காகவும், எதிரில் உள்ள எம்.ஜி.ஆர். காய்கறிமார்க் கெட்டுக்கு செல்லும் வாகனங்கள் வலதுபுறம் திரும்புவதற்காகவும் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் கோவை சாலை பாதுகாப்பு கூட்டம் நடந்தது. அதில், மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஊட்டி பஸ்நிலையம் எதிரில் சாலையின் குறுக்கே நடைபாதை மேம்பாலம் அமைக்கலாம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்க கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் அருகே உள்ள நடைபாதை மேம்பாலத்தை ஏற்கனவே பொதுமக்கள் யாரும் பயன்படுத்துவது இல்லை. சுரங்கப்பாதை அமைக்கவும் சாத்தியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த கூட்டத்தில், மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பாலம் அமைப்பது பற்றி கோவை கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன் கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து மேட்டுப்பாளையம் சாலையில் கங்கா ஆஸ்பத்திரி எதிரில் இருந்து தொடங்கி என்.எஸ்.ஆர். சாலை சந்திப்பு, சிவானந்தா காலனி செல்லும் சாலை சந்திப்பு, ஊட்டி பஸ் நிலையம் செல்லும் சந்திப்பு ஆகிய இடங்கள் வழியாக மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வு நடத்துமாறு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தர விட்டார்.
அதன்படி அந்த சாலையில் தினமும் எவ்வளவு வாகனங்கள் செல்கின்றன? வாகனங்கள் அந்த பகுதியை கடப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்பன போன்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர். அது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அங்கு ரூ.123 கோடி செலவில் மேம்பாலம் கட்ட கருத்துரு தயார் செய்து தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இது குறித்து கோவை கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன் கூறியதாவது:-
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ஊட்டி செல்வதற்கான பஸ் நிலையம், எம்.ஜி.ஆர். மார்க் கெட் மற்றும் சாய்பாபா கோவில் ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வரு கிறது. இதை தவிர்க்க சுமார் 1¾ கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. என்.எஸ்.ஆர். சாலை சந்திப்பு, சிவானந்தா காலனி, செல்வபுரம் சாலை சந்திப்பு, ஊட்டி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் கட்டப் படும் மேம்பாலத்தின் மேல் வாகனங்கள் தடையின்றி செல்லும். அதன் கீழ் வழக்கம் போல வாகனங்கள் செல்லும்.
மேலும் கவுண்டம்பாளையம் சந்திப்பில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான மண் பரிசோதனை நடத்தப்பட்டு விட்டது. கவுண்டம்பாளையம் சந்திப்பு நடுவில் ஒரு கான்கிரீட் தூண் அமைப்பதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து தடாகம் செல்லும் வாகனங்கள் வலதுபுறம் திரும்ப முடியாது. எனவே கான்கிரீட் தூணை சந்திப்பு பகுதிக்கு முன்பாகவே அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான திருத்திய வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.