பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்க ஓங்கி ஒலிக்கும் குரல்; அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தம்

0
8

பொள்ளாச்சி: ‘பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என, பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை வலியுறுத்தியுள்ளது.

பொள்ளாச்சி, ஆங்கிலேயர் காலத்தில், 1857ல் சப் – கலெக்டர் தலைமையில் இயங்கும் வருவாய் கோட்டமாக இருந்தது. கோட்டத்தில், திருப்பூர், உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தாலுகாக்கள் இருந்தன.

கடந்த, 2008ல் புதியதாக உருவான திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்கள் இணைக்கப்பட்டன.தற்போது, பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய தாலுகாக்கள், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ளன.

நான்கு தாலுகாக்களை உள்ளடக்கிய பொள்ளாச்சி வருவாய் கோட்டம், மொத்தம், 1344.31 சதுர கி.மீ., பரப்பளவு மற்றும் கடந்த, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 6,37,091 மக்கள் தொகையினை கொண்ட பெரிய வருவாய் கோட்டமாக உள்ளது. தற்போது மக்கள் தொகை வளர்ச்சி, குடியிருப்புகள் அதிகரிப்பு காரணமாக, 13 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை இருக்கலாம்.

கிணத்துக்கடவு, ஆனைமலை, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களை இணைத்து மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்படுகிறது.

இந்நிலையில், பழநியை தலைமையிடமாக கொண்டு, உடுமலை, மடத்துக்குளம், ஒட்டன்சத்திரம், பழநி தாலுகாக்களை இணைத்து, மாவட்டம் உருவாக்குவதற்கான விரிவான அறிக்கை தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கு பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் பகுதி மக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லவே இந்த புதிய மாவட்டம் உருவாக்க அமைச்சர் முயற்சிப்பதாக புகார்எழுந்துள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின் செயற்குழு மற்றும் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.

தலையாய கோரிக்கை

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்வருமாறு:

பொள்ளாச்சி மாவட்டம் என்ற அந்தஸ்தை, அ.தி.மு.க., அரசு வழங்க அனுமதித்து அதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே நடத்தப்பட்டு அரசுக்கு சமர்பிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. தேங்காய் தலைநகரம் என பெயர் பெற்றுள்ளதுடன், தென்னை நார் பொருட்களுக்கான ஏற்றுமதிக்கு சிறந்த நகரம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது

வால்பாறை, சோலையாறு நகரில் இருந்து, கோவைக்கு, 125 கி.மீ., தொலை துாரம் உள்ளது. அப்பகுதி மக்கள், கோவை மாவட்ட கலெக்டரை சந்திக்க, 12 மணி நேரம் பயணிக்க வேண்டும். இதனால், கால நேர விரயம், மருத்துவ சிகிச்சை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

எனவே, பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும். புதிய மாவட்டங்களின் அறிவிப்பு வெளியாகும் போதெல்லாம், பொள்ளாச்சி மாவட்டம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே உள்ளது. அரசு நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘ஸ்டேட்டஸ்’ வையுங்க!’

பொள்ளாச்சி மாவட்டமாக்க வேண்டும் என வலியுறுத்த சமூக வலைதளங்களில், ‘ஸ்டேட்டஸ்’ வைக்க தொழில்வர்த்தக சபை சார்பில் வலியுறுத்தப்பட்டது.

தமிழக அரசுக்கு, பொள்ளாச்சி வாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, நமது அனைத்து தேவைகளும் ஒரே கோரிக்கையில்… பொள்ளாச்சி ஒட்டுமொத்தவளர்ச்சிக்கு ஒரே வழி… பொள்ளாச்சி மாவட்டம் வேண்டும் என, அச்சடிப்பட்டுள்ளதை ‘ஸ்டேட்டஸ்’ ஆக வைக்க வலியுறுத்தப்பட்டது.

பட்ஜெட்டில் அறிவிக்கணும்!

ஆனந்தகுமார், தொழில்வர்த்தக சபை இணை செயலாளர்: மாவட்டமாக உருவாக அனைத்து வசதிகளும் பொள்ளாச்சியில் உள்ளது. ஆனால், இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இருந்த திருப்பூர், மாவட்டமாக உருவாகி உள்ளது. நீர்நிலைகள் பாதுகாப்பு, இயற்கை சார்ந்த பகுதியாக பொள்ளாச்சி உள்ளது. மாவட்டமாக்க அரசு முன்வர வேண்டும்.மக்களின் இந்த கோரிக்கையை அரசிடம் கொண்டு சென்று, பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட வலியுறுத்தப்படும். இதற்காக முழு முயற்சிகளும் எடுக்கப்படும். அனைத்து சங்கங்களிடமும் இதற்காக கருத்து கேட்கப்பட்டுள்ளது.