பொள்ளாச்சி நகராட்சியுடன் 5 ஊராட்சிகள் இணைப்பு! எல்லை விரிவாக்கத்தால் வருவாய் உயரும்

0
15

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியுடன், ஐந்து ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.ஆனால், கருத்துருவில் இடம் பெற்றிருந்த, இரண்டு ஊராட்சிகள் சேர்க்கப்படவில்லை.

பொள்ளாச்சி நகராட்சி மொத்தம், 13.87 சதுர கி.மீ., பரப்பு கொண்டது. 1983 ஏப்.,1 முதல், சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகரின் வளர்ச்சி மற்றும் வருமானத்தை பெருக்கும் வகையில் அருகேயுள்ள கிராமங்களையும், மற்றும் பேரூராட்சிகளையும் இணைத்து எல்லை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது.

கடந்த, 2017ல்ஆச்சிப்பட்டி, கிட்ட சூராம்பாளையம் (பனிக்கம்பட்டி), புளியம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஜமீன் முத்துார், தாளக்கரை உள்ளிட்ட ஊராட்சிகளையும்; சூளேஸ்வரன்பட்டி மற்றும் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து எல்லை விரிவாக்கம் செய்யலாம் என வரைபடத்துடன் கூடிய கருத்துரு அரசுக்கு

அனுப்பப்பட்டது. ஆனால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

6 ஆண்டுக்கு பின்

ஆறு ஆண்டுகளுக்கு பின், நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தலின்படி, நகராட்சி கமிஷனர், தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய ஆணையாளர்களுக்கு கடந்த, 2023டிச., மாதம் கடிதம் அனுப்பினார். அதில், நகராட்சிக்கு அருகே உள்ள ஏழு ஊராட்சிகள், நகராட்சியுடன் இணைப்புக்காக,ஊராட்சிகளின் மொத்த பரப்பளவு,

மக்கள் தொகை, மூன்றாண்டுகளில் தணிக்கை செய்யப்பட்ட வரவு, செலவு அறிக்கை, ஊராட்சி வரைபடம் மற்றும் ஊராட்சி தீர்மானம் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது.

கடந்தாண்டு செப்., மாதம் நகராட்சியுடன் இணைக்கப்படும் ஊராட்சிகள் குறித்த உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டது.அதில், ஜமீன் முத்துார், புளியம்பட்டி, சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கிட்டசூராம்பாளையம், ஆச்சிப்பட்டி ஊராட்சிகள் இணைக்கப்படும், என குறிப்பிடப்பட்டு இருந்தது.

வெளியானது அறிவிப்பு

இந்நிலையில், நேற்றுமுன்தினம் அரசு வெளியிட்ட அறிவிப்பில், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, புளியம்பட்டி, கிட்டசூராம்பாளையம், ஆச்சிப்பட்டி ஆகிய ஐந்து ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, 2024 ஊராட்சி மக்கள் தொகை, 45,801 பேருடன், நகராட்சி மக்கள் தொகை 1,26,000 பேரையும் சேர்த்து, 1,71,801 பேர் உள்ளனர். நகராட்சி எல்லை, 33.64 சதுர கி.மீ., ஆக உயர்ந்துள்ளது. நகராட்சியின் வருவாய், 26.47 கோடி ரூபாயாக உயரும்.

நகர எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டதையடுத்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நகராட்சி கமிஷனர் கணேசன் தலைமையிலான அதிகாரிகள் அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

ஊராட்சியில் எதிர்ப்பு

ஊராட்சிகளில், தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். நகராட்சியுடன் இணைக்கும் போது, இந்த திட்டத்தில் பயனடைய முடியாது.

மேலும், நகராட்சியில் இருப்பது போன்று, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் ஊராட்சியிலும் உயரும். புதிதாக வீடு கட்ட அனுமதி பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படும். அதனால், ஊராட்சி பகுதியில் உள்ள மக்கள், நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

5ம் தேதிக்கு பின் அதிகாரம்!

அதிகாரிகள் கூறியதாவது:நகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதலில், ஜமீன் முத்துார், ஊஞ்சவேலாம்பட்டியும் இணைத்து ஏழு ஊராட்சிகள் பட்டியல் வழங்கப்பட்டது.அதில், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியை கடந்து, ஜமீன் முத்துாருக்கு செல்ல வேண்டும். இதனால், அந்த ஊராட்சியை இணைப்பதில் இடையூறு உள்ளது.அதுபோன்று, ஊஞ்சவேலாம்பட்டி முழுவதும் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. எனவே, நகரையொட்டியுள்ள ஐந்து ஊராட்சிகள் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது.ஊராட்சி தலைவர்களின் பொறுப்புகள் வரும், 5ம் தேதியுடன் நிறைவு பெறுகின்றன. அதன்பின், நகராட்சி கமிஷனர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்க வாய்ப்புள்ளது.புதிய வார்டுகள்உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும். நகரில் உள்ள வசதிகள் அனைத்தும், கிராமங்களிலும் விரிவாக்கம் செய்யப்படும்.இவ்வாறு, கூறினர்.