பொள்ளாச்சி – கோவை ரயில் பயணியர் அதிருப்தி 46 கி.மீ. , துாரம் பயணிக்க 2 மணி நேரமாகுது!

0
7

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு இரவு நேர ரயிலில் செல்ல, 46 கி.மீ., தொலைவுக்கு, இரண்டு மணி நேரமாவதால் பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சியில் இருந்து, இரவு, 8:50 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு, 10:15 மணிக்கு ரயில் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டது.

இந்நிலையில், புத்தாண்டு முதல் ரயில் நேரங்கள் மாற்றப்பட்டன. அதில், இரவு நேரத்தில் இயக்கப்படும் ரயில், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு 46 கி.மீ., செல்ல, இரண்டு மணி நேரமாவதால் பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ரயில் பயணியர் கூறியதாவது:

பொள்ளாச்சியில் இருந்து, இரவு, 8:50 மணிக்கு கிளம்பி, கோவைக்கு, 10:15 மணிக்கு சென்றடைந்தது. இதனால், சென்னை, பெங்களூரு ரயில்களை பிடிக்க முடிந்தது. தற்போது, பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் ரயில் நேரம் மாற்றப்படவில்லை; ஆனால், 46 கி.மீ., தொலைவுக்கு இரண்டு மணி நேரம் இயக்கப்பட்டு, கோவைக்கு இரவு, 10:50 மணிக்கு சென்றடைகிறது. இதனால், சென்னை, பெங்களூரு ரயில்களை பிடிக்க முடிவதில்லை.

இதே வழித்தடத்தில், மதிய நேரத்தில் கோவை – மதுரைக்கு இயக்கப்படும் ரயில், ஒரு மணி நேரத்துக்குள் பொள்ளாச்சியை அடைகிறது. ஆனால், இரவில் பொள்ளாச்சி – கோவை செல்லும் ரயிலுக்கு இரண்டு மணி நேரம் தேவைப்படுவது புதிராக உள்ளது.

மேலும், கோவைக்கு பஸ் மற்றும் வாகனங்களில் சென்றால் கூட ஒரு மணி நேரத்துக்குள் சென்று விடலாம். ரயில் மிக மந்தமாக செல்வதால் யாருக்கும் பயன் இல்லை.

தற்போது, புல்லட் ரயில் இயக்கம், ரயில் வேகம் அதிகரிப்பது என முன்னோக்கி செல்லும் நேரத்தில், பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் இந்த ரயில் மட்டும் பின்னோக்கி செல்கிறது.

பொள்ளாச்சியில் இருந்து நேரடியாக பெங்களூருக்கு செல்ல ரயில் இல்லாத சூழலில், இரவு கோவை செல்லும் ரயிலை பயன்படுத்தியே, பெங்களூரு சென்றனர். தற்போது, இரண்டு மணி நேரம் பயணிக்க வேண்டுமென்பதால், இந்த ரயிலை பயணியர் தவிர்க்க நேரிடும்.

ரயில் பயணியர் பயன்படுத்தாவிட்டால், இந்த ரயில் சேவை நிறுத்த வாய்ப்புள்ளது. எனவே, அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து கோவைக்கு மீண்டும் பழைய நேரமான, இரவு, 10:15 மணிக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.