பொள்ளாச்சியில் மீண்டும் பரபரப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 9 பேர் கைது

0
114

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி செரீப் காலனியை சேர்ந்தவர் அமானுல்லா (வயது 25). இவர், கிணத்துக்கடவு காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் அமானுல்லா அந்த சிறுமியை பல இடங்களுக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. மேலும் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது.

சிறுமியுடன் தனக்கு உள்ள பழக்கம் பற்றி தனது நண்பரான ஆண்டாள் அபிராமி நகரை சேர்ந்த பகவதியிடம் (26) அமானுல்லா கூறினார். இதையடுத்து பகவதியும் அந்த சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி அந்த சிறுமியை அமானுல்லா தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று, மீண்டும் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தந்தையிடம் கூறினார்.

இதையடுத்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் கொடுத்தார். இதன் மீது அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் அமானுல்லா, பகவதி உள்பட 10 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் இது தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நேற்று முன்தினம் மாலை பொள்ளாச்சிக்கு வந்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். பின்னர் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டுகள் சிவக்குமார் (பொள்ளாச்சி), விவேகானந்தன் (வால்பாறை) ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இந்த சம்பவம் தொடர்பாக அமானுல்லா, பகவதி, ஜமீன்ஊத்துக்குளியை சேர்ந்த முகமது அலி (28), அழகாபுரி வீதியை சேர்ந்த டேவிட் செந்தில் (30), செரீப்காலனியை சேர்ந்த முகமது ரபீக் (28), மடத்துக்குளத்தை சேர்ந்த அருண்நேரு (28), குமரன் நகரை சேர்ந்த சையது முகமது (25), சி.டி.சி. காலனியை சேர்ந்த இர்ஷாத்முகமது (28), இர்ஷாத் பாஷா (28) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

மேலும் திண்டுக்கல்லை சேர்ந்த பிரபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு கோவை மாவட்ட கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு அனிதா நேற்று போலீஸ் நிலையத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் கைதான 9 பேரிடம் விசாரணை நடத்தினார். அதை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அமானுல்லா உள்பட 9 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மேலும் போலீசார் கூறியதாவது:-

பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவரது தந்தை 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மேலும் அவர் 3-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து, அவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. இதனால் சிறுமியை கவனிக்க ஆளில்லாததால், அவர் தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இந்த நிலையில் சிறுமிக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் தவறான பாதைக்கு சென்றதாக தெரிகிறது. தாய் இறந்த பிறகு தந்தை சிறுமியிடம் பாசம் காட்டி சரியான முறையில் வளர்த்து இருந்தால் அந்த சிறுமிக்கு இந்த கொடுமை நேர்ந்து இருக்காது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஏற்கனவே பொள்ளாச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் இளம்பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. தற்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 9 பேர் கைதான சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.