கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் முன்னிலை வகித்தார். இதில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில் 11-ம் வகுப்பு மாணவிகள் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில், நாங்கள் கோவை குட்செட் சாலையில் உள்ள பிரசென்டேஷன் பள்ளியில் 11-ம் வகுப்பு தொழில்கல்வி படித்து வருகிறோம். எங்களுடன் படிக்கும் பிற பாடப்பிரிவு மாணவிகளுக்கு தற்போது மடிக்கணினி வழங்கப்பட்டு விட்டது. ஆனால் எங்கள் வகுப்பில் உள்ள 78 மாணவிகளுக்கு இதுவரை மடிக்கணினி வழங்கப்பட வில்லை. எனவே எங்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை கிழக்கு மாநகர செயலாளர் தனபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அளித்த மனுவில், கோவையில் அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை, சத்தி சாலை ஆகிய சாலைகளில் பெரும்பாலும் சிக்னலுக்கு அருகில் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர். எனவே சிக்னல் அருகே உள்ள பஸ் நிறுத்தங்களை இடமாற்றம் செய்ய வேண்டும். பீளமேடு, ஹோப் காலேஜ், சித்ரா ஆகிய பகுதிகளில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
கோவை மாவட்ட பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்கள் அளித்த மனுவில், கோவை பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 442 பேர் ஒப்பந்த ஊழியர்களாக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஒப்பந்ததாரர் மூலமாக மாதாமாதம் சம்பளம் வழங்கி வந்தது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 6 மாதம் சம்பளம் எங்களுக்கு வழங்கப்பட வில்லை.
இது குறித்து கேட்டால் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சரியான பதில் அளிப்பது இல்லை. இதனால் தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறது. எனவே எங்களுக்கு சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக ஒப்பந்த ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ராபிடோ இருசக்கர (பைக்டாக்சி) வாடகை ஓட்டுனர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் இருசக்கர வாடகை ஓட்டுனர்களாக உள்ளனர். ஆனால் கோவையில் பைக்டாக்சி இயக்கக் கூடாது என மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார். இதனால் நாங்கள் வேலையில்லாமல், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். இருசக்கர வாகனங்களை வாடகைக்கு இயக்க மோட்டார் வாகன சட்டத்திற்குள் அதை கொண்டு வரவேண்டும். மேலும் பைக் டாக்சி இயக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பொய்யாமொழி உள்ளிட்டோர் அளித்த மனுவில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஆரம்பத்தில் 24 மணி நேர வேலை வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2 மாதங்களாக 12 மணி நேர வேலை வழங்கப்படுகிறது.
இதனால் காலை 8 மணிக்கு பணிக்கு வருகிறவர்கள் இரவு 8 மணிக்கு பணி முடிக்க வேண்டும். இந்த 12 மணி நேர வேலையால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. பெண் ஊழியர்கள் மிகவும் அவதி அடைகின்றனர்.
எனவே பழைய முறைப்படி 24 மணி நேர பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.