நாட்டு மக்களையும், முக்கியமான உள்கட்டமைப்புகளையும் பாதுகாக்க எந்நேரமும் தொடர் விழிப்புடன் தயார் நிலையில் இருக்கும்படி அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு — காஷ்மீரின் பஹல்காமுக்கு சென்ற சுற்றுலா பயணியரில், ஆண்களை மட்டும் குறி வைத்து 26 பேரை பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பெண்களின் கண்ணெதிரிலேயே கணவன் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் விதமாக, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ என்ற ராணுவ நடவடிக்கையை நம் நாடு நேற்று முன்தினம் துவங்கியது.
100 பயங்கரவாதிகள்
அதன்படி, பாக்., மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்களை நம் ராணுவம் நிர்மூலமாக்கியது. அதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இரு நாடுகளுக்கு இடையே நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலர்களின் உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தை பிரதமர் மோடி நேற்று கூட்டினார்.
டில்லியில் அவர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சரவை செயலர், பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள், உள்துறை, ராணுவம், வெளியுறவு, தகவல் மற்றும் ஒலிபரப்பு, எரிசக்தி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களின் செயலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தற்போதைய சூழ்நிலையை சாமாளிப்பதற்கு மத்திய அமைச்சகங்கள் ஒவ்வொன்றும் மேற்கொண்டுள்ள திட்டமிடல்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அப்போது, தொடர்ச்சியான செயல்பாடுகளை உறுதி செய்யும் விதத்தில், அமைச்சகங்களுக்கும் அரசின் பிற அமைப்புகளுக்கும் இடையே, தடையற்ற ஒருங்கிணைப்பு அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
போலி செய்திகள்
மிக முக்கியமான காலகட்டத்தில் நாடு பயணித்துக்கொண்டிருப்பதால், தொடர் விழிப்புணர்வு, திட்டமிட்ட ஒருங்கிணைப்பு, தெளிவான தகவல் தொடர்பு ஆகியவை முக்கியம் என்பதை சுட்டிக் காட்டினார். மேலும், தேச பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
நாட்டின் மிக முக்கியமான உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் பொதுமக்கள் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் தவறான மற்றும் போலி செய்திகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தேச பாதுகாப்பில் தயார் நிலை, அமைச்சகங்களுக்கு இடையே நெருங்கிய தொடர்பு, மாநில அரசுகளின் அதிகாரிகள் மற்றும் கீழ்நிலை வரையிலான அரசு அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை பேணுவது உள்ளிட்ட மிக முக்கியமான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு செயலரும், தங்கள் அமைச்சகங்களின் செயல்பாடுகளை விரைவாக மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் அத்தியாவசிய அமைப்புகளின் பாதுகாப்பு, அவசர கால தயார் நிலை போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தும்படியும் கூறப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.