பொதுமக்களுடன் மாரத்தான் ஓடிய போலீஸ் டி.ஜி.பி.- கலெக்டர், ஆணையாளர், போலீஸ் கமிஷனர் உள்பட 18 ஆயிரம் பேர் பங்கேற்பு

0
61

கோவையில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட மாரத்தானில் பொதுமக்களுடன் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு ஓடினார்.இதில் கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், போலீஸ் கமிஷனர் உள்பட 18 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

மாரத்தான் போட்டி

புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக நிதி திரட்டும் வகையில் கோவையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கோவையில் மாரத்தான் நடந்தது. ஆண்கள், பெண்கள், முதியவர், சிறுவர்கள் என்று 5 கி.மீ., 10 மற்றும் 21 கி.மீ. ஆகிய தூரத்துக்கு போட்டி நடத்தப்பட்டது.

அதன்படி கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகே தொடங்கிய மாரத்தான் போட்டியில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுடன் கலந்து கொண்டு ஓடினார்.

பலத்த பாதுகாப்பு

அண்ணாசாலை வழியாக ரேஸ்கோர்ஸ், திருச்சி ரோடு பகுதிக்கு சென்று மீண்டும் அங்கிருந்து ரேஸ்கோர்ஸ் வழியாக அண்ணா சிலை அருகே வந்து அங்குள்ள தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் முடிவடைந்தது. இந்த மாரத்தான் போட்டியில் பெரியவர்கள், சிறியவர்கள், தொழில் அதிபர்கள், போலீசார் உள்பட பல்வேறு நபர்கள் கலந்து கொண்டு ஓடினார்கள். இதில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு 21 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரம் 40 நிமிடத்தில் ஓடி முடித்தார்.

பின்னர் நடந்த நிறைவு விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மாரத்தானையொட்டி கோவையில் நேற்று காலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. அத்துடன் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

பின்னர் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

18 ஆயிரம் பேர்

முதலில் மாரத்தான் என்றால் ராணுவ வீரர்கள், போலீசார் என்றுதான் பங்கேற்பார்கள். ஆனால் தற்போது பொதுமக்களும் பங்கேற்று ஓடி வருகிறார்கள். இன்று (நேற்று) கோவையில் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியில் 18 ஆயிரம் பேர் கலந்து கொண்டு ஓடினார்கள்.

இவ்வாறு தினமும் ஓடும்போது உடல் மற்றும் மனநலம் நன்றாக இருக்கும். இந்த போட்டியில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்பட ஏராளமான போலீசார் ஓடினார்கள். அகில இந்திய போட்டிகளில் தமிழக போலீசார் முன்னிலை வகித்து வருகிறார்கள். உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் தினமும் ஒரு மணி நேரம் சைக்கிள் பயணம், ஓட்டம் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மாரத்தான் போட்டியில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஷ், சிலம்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.