பொங்கல் பானைகள் உற்பத்தி துவக்கம்

0
13

மேட்டுப்பாளையம்; வருகிற தைப்பொங்கலை முன்னிட்டு, காரமடை பகுதியில் பொங்கல் வைக்க தேவையான மண் பானைகள் உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.

தைப்பொங்கலை ஒவ்வொரு ஆண்டும், மிகவும் கோலாகலமாக பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் அன்று புது பானைகளில் பொங்கலிட்டு சூரியனை வழிபடுவர்.

பொங்கலுக்கு தேவையான மண் பானைகள், சட்டிகளை செய்யும் தொழிலாளர்கள், தற்போது கிராமங்களில் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அவர்கள் தைப்பொங்கலுக்கு தேவையான, மண் பானைகளை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து காரமடை அடுத்த மருதூரை சேர்ந்த பழனிசாமி, 59 கூறியதாவது:

கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை, மண் சட்டி, பானைகள் செய்வதை, பலர் ஒரு தொழிலாக செய்து வந்தனர். காலப்போக்கில் அலுமினியம், எவர்சில்வர் பாத்திரங்களின் ஆதிக்கம் அதிகரித்ததால், பொதுமக்கள் இந்த பாத்திரங்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதனால் மண் சட்டிகள், பானைகள் ஆகியவை வாங்குவது முற்றிலும் குறைந்தது.

பொங்கல் அன்று புது பானையில் பொங்கல் வைக்கவும், கார்த்திகை தீபத்தன்று, புது மண் விளக்கில் தீபம் ஏற்றவும், திருமணம் மற்றும் துக்க காரியங்களுக்கு புதிய மண் சட்டி, பானைகளை, பழமை மாறாமல் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய, அந்தந்த காலகட்டத்தில்

குறைவான அளவில் மண் பாண்டங்களை செய்து வருகிறோம். வெளியிடங்களில் இருந்து வாகனங்களில் களிமண்ணை எடுத்து வருவதற்கு, எளிதில் அனுமதி கிடைப்பதில்லை.

இந்த தொழில் நலிவடைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். மேலும் இந்த தொழிலை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல, பல இடங்களில் மண் பாண்டங்கள் செய்யும் பயிற்சி நிலையம் அமைத்து,சுய வேலை வாய்ப்பை, தமிழக அரசு ஏற்படுத்தி தர முன்வர வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.