பொங்கல் பரிசு தொகுப்புடன் மண் பானை, அடுப்பு வழங்க வேண்டும்

0
89

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கத்தினர் தலையில் மண் பானை, அடுப்பு ஆகியவற்றை சுமந்து ஊர்வலமாக வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பொங்கல் பண்டிகையின்போது விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பருப்பு, சர்க்கரை, அரிசி, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதேபோல் நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் அவர்களிடம் இருந்து கைத்தறி வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் நெசவாளர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.

மண்பானை, அடுப்பு

எனவே அழிந்து வரும் மண்பாண்ட தொழிலை பாதுகாக்கவும், அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் மண் பானை, அடுப்பு வழங்க வேண்டும். இதனை அரசே நேரடியாக மண்பாண்ட தொழிலாளர்களிடம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு செயலாளர் சுதா தலைமையில் ஏராளமான பெண்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், கோவை மாவட்டத்தில் வீடு இல்லாத குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். 100 நாட்கள் வேலை திட்டத்தை பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுக்கு ஏற்ற பணிகளை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மின் இணைப்பு

கோவை குறிச்சி சில்வர் ஜூப்ளி நகரை சேர்ந்த பொதுமக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றியபடி வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், சில்வர் ஜூப்ளி நகரில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். எங்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மின் இணைப்பு மட்டும் வழங்கப்படாமல் உள்ளது. எனவே தாசில்தார் மூலம் தடையின்மை சான்று வழங்கி எங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தென்இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் அளித்த மனுவில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.