பொங்கல் தொகுப்பு வாங்க ஜன.,1 முதல் டோக்கன்

0
12

கோவை; தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு, 2025ம் ஆண்டுக்கான பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில், 1540 ரேஷன்கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக 11.42 லட்சம் கார்டுதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இவற்றுடன், மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள், 940 பேர் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றன

வரும் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கப்படுகிறது. இது தவிர, 70 சதவீதம் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

இது குறித்து, கோவை மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அறிவிப்பு வெளி வந்துள்ளது. பொருட்கள் இன்னும் வரவில்லை. இலவச வேட்டி சேலைகள் 2 லட்சத்து 15 ஆயிரம் வந்துள்ளது. ஜன., 1ம் தேதி முதல் டோக்கன் கொடுக்க இருக்கிறோம்.

பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைகளில், ஊழியர்கள் டோக்கன் கொடுத்து விடுவார்கள். இலங்கை தமிழர்கள் ஆழியார் பகுதியில் மட்டும்தான் உள்ளனர். அங்குள்ள கடைகள் மூலம் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும். ஜன., 10ம் தேதிக்குள், அனைத்து கார்டுதாரர்களுக்கும் தொகுப்பு கொடுத்து முடித்து விடுவோம்’ என்றார்.