பொங்கல் தொகுப்பு வழங்குவதில் தாமதம்; ச ர்வர் முடங்கியதால் கார்டுதாரர்கள் தவிப்பு

0
7

கோவை : பொங்கல் தொகுப்பு வழங்க துவங்கிய முதல் நாளான நேற்று சர்வர் முடங்கியதால் பெரும்பாலான ரேஷன் கார்டுதாரர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பொருட்களை பெற்றனர்.

கோவை மாவட்டத்தில் 11,12,635 அரிசி வாங்கும் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேஷ்டி சேலை வழங்கும் பணி நேற்று காலை துவங்கியது.

கோவையிலுள்ள, 1403 ரேஷன்கடை வாயிலாக வினியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன் படி நேற்று காலை 9:30 மணிக்கு அனைத்து ரேஷன்கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி துவங்கியது.

துவங்கிய ஒன்றரை மணி நேரத்திலேயே சர்வர்கள் முடங்கியதால் தொகுப்பு வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டது. இதையடுத்து 1:00 மணிக்கு சர்வர் சரியானதும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி சீரானது.

ஆனாலும் பொருட்கள் வாங்குவதில் வாக்குவாதங்களும் தகராறுகளும் பல ரேஷன் கடைகளில் ஏற்பட்டது. போலீசாரும் அரசியல் கட்சியினரும் இடைமறித்து பிரச்னைகளை சரிசெய்தனர்.

பெரும்பாலான கடைகளில் வேஷ்டி சேலை இதில் ஏதாவது ஒன்று மட்டுமே வழங்கப்பட்டது. சில கடைகளில் கரும்பு சிறியதாக இருப்பதாக சொல்லி வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து ரேஷன்கடைக்காரர்கள் கூறியதாவது: முன்பு வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு மட்டும் இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டது. தற்போது அரிசி கார்டுதாரர்கள் அனைவருக்கும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 40 முதல் 50 சதவீதம் வரையே ரேஷன்கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 100 சதவீதம் இருப்பு இருப்பதை போல் செயலியில் காண்பிக்கிறது.

அதைப்பார்த்துவிட்டு வரும் பலரும் வேஷ்டி சேலையை கேட்டு தகராறில் ஈடுபடுகின்றனர். இப்பிரச்னையால் தொகுப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.