பைக்கில் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்; அணியாத 12 ஆயிரம் பேருக்கு அபராதம்

0
6

கோவை; கோவையில் உள்ள பலரும் அறியாத ஒரு முக்கிய சமாச்சாரம், இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது. கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்து, ெஹல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. இதை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், விபத்து உயிரிழப்புகள் குறைந்தபாடில்லை.

போக்குவரத்து விதிமீறல்களும், இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகின்றன. இதைக்கருத்தில் கொண்டு, போக்குவரத்து விதிமீறல்களுக்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன.

உயிரிழப்பு அதிகம்

விதிமீறல்களுக்கான அபராதத் தொகை, பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்நிலையில், விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களை விட, பின்னால் அமர்ந்து செல்பவர்களே அதிகளவில் உயிரிழப்பது தெரிந்தது.

எனவே, பின்னால் அமர்ந்து செல்வோரும், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டது. துவக்கத்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், அரசு விதியை கட்டாயம் பின்பற்ற தேவையில்லை என, வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

விதிமுறை அமல்

இருப்பினும், தொடர் உயிரிழப்பின் காரணமாக, விதிமுறையை கண்டிப்பாக பின்பற்ற உத்தரவிட்டப்பட்டது. 2020ம் ஆண்டு முதல், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது.

அதன் பின் ஓரிரு மாதங்கள், பின்னால் அமர்ந்து சென்றவர்கள் ஹெல்மெட் அணிந்தவாறு சென்றதை சாலைகளில் காண முடிந்தது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடித்து, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு ஒரு வாரம் மட்டும் ஏற்படுத்தப்பட்டது.

அரைகுறை விழிப்புணர்வு

இந்த விழிப்புணர்வு பிரசாரம் போதாது என்பதை, தற்போது பெரும்பாலானோர் ெஹல்மெட் அணியாமலே பயணிப்பதில் இருந்து தெரியவருகிறது. ஆனால், வாகன உரிமையாளர் கட்டாயம் அபராதம் செலுத்திதான் ஆக வேண்டும்.

அபராதம் விதிக்கப்பட்ட பலரும், அவற்றை செலுத்தி வருகின்றனர். இது குறித்து பலரும் அறியாததால், போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், ”வாகன ஓட்டி மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்கள், ஹெல்மெட் அணியாமல் செல்வதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. அதைத்தடுக்கவே தற்போது இவ்விதிமுறை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது.

பில்லியன் ரைடரும்(பின்னால் அமர்பவர்) ெஹல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை, பல ஆண்டுகளாக உள்ளது. பல கட்டங்களாக இது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பலரும் அதுகுறித்து கவலைப்படுவதில்லை.

”கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக கண்டறிந்து, அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

அபராதம் விதிக்கப்பட்டவர்கள் – 35,337

பின்னால் அமர்ந்தவர்கள் – 12,188

மொத்தம் – 47,525